காஞ்சியில் பொய்கையொன்றில் பொற்றாமறையில் பிறந்தவராய், ஸ்ரீமந்நாராயாணனுக்கு வெய்யசுடரோனை விளக்காக ஏற்றியவரான பொய்கை ஆழ்வாரை தியானிக்கிறேன்.
பொய்கை ஆழ்வார், துவாபரம் என்ற யுகத்தில், "ஆஜ்ஞாதீ "ஸ்ரீ சந்தந என்னும்" அக்ஷரங்களால் கடபயாதி ஸங்க்யைப் படி கிடைத்த 862900 வருடம் சென்றபின் ஸித்தார்த்தி என்கிற வருடம் ஐப்பசி மாதத்தில் ஸுக்லபக்ஷத்தில் அஷ்டமி திதியில் செவ்வாய் கிழமையில், விஷ்ணுவினுடைய மங்களமான திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தருளினார்.
பரமபுருஷனுடைய பாஞ்சஜன்யமென்னும் திருச்சங்காழ்வான், எல்லா உயிர்களையும் ரக்ஷிப்பதற்காக ஐப்பசி மாதத்தில் விஷ்ணுவினுடைய திருவொண நாளில் பொற்றாமறை மலரின் நடுவிலிருந்து பொய்கை ஆழ்வாராக அவதரித்தருளினார். பொய்கையார் என்கிற பெயர் சங்க இலக்கியங்களான புறநானூறிலும் நற்றிணையிலும் சில பாடல்களைப் பாடியதாக திணைத் துறைக் குறிப்புக்களில் இருந்து தெரிகிறது. போரில் அகப்பட்ட சேர அரசனை விடுவிப்பதற்காக சோழன் கோச்செங்கணானைப் புகழ்ந்து பாடும் 'களவழி நாற்பது' என்கிற நூலைப் பாடியவர் பொய்கையார் என்பர். சங்ககாலப் பொய்கையாரும், களவழி நாற்பது பொய்கையாரும் பொய்கையாழ்வாரும் ஒருவரல்லர் என்பது பரவலான கருத்து. காரணம், பொய்கையார் பாடல்கள் சிலவற்றில் ''தோள் அவனையல்லால் தொழா'' (என் தோள்கள் அவனை மட்டுமே வணங்கும்) ''நயவேன் பிறர் பொருளை நண்ணேன்'' (திருமாலையல்லாது வேறு எவரையும் பாடமாட்டேன்) என்று சொல்கிறார்.
No comments:
Post a Comment