Tuesday 19 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 5



பக்தர் புடைசூழ கணிக்கண்ணனுடன் திருமழிசை ஆழ்வார் எம்பெருமானை வணங்கி விடைப்பெற்று ஒருநாள் திருக்குடந்தை தலயாத்திரைப் புறப்பட்டார். வழியெங்கும் வைஷ்ணவ ஷேத்திரங்களை தரிசித்து கொண்டே வந்தனர். பெரும்புலியூர் என்னும் திருத்தலத்தை வந்தடைந்த போது அந்த ஊரில் எங்காவது ஓரிடத்தில் கொஞ்சம் இளைப்பாரிச் செல்லலாம் என்று ஆழ்வார் எண்ணினார். அந்தணர் வசிக்கும் வீதி வழியாக ஆழ்வாரும் கணிக்கண்ணனும் வந்து கொண்டிருந்தபடியால் ஒரு அந்தணர் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தனர். அந்த வீட்டில் அந்தணர்கள் அனைவரும் ஒன்றுகூடி வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். திண்ணையில் வந்தமர்ந்த இவ்விருவரையும் பார்த்து அவர்கள் பெருமையை அறியாமல் வேற்று மதத்தினர் என்றெண்ணி "அவர்கள் கேட்கும்படியாக நாம் வேதம் சொல்லுவது அந்த வேத முதல்வனுக்கு செய்யும் அபச்சாரம் ஆகும்" என்று வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர். வேத ஒலி நின்று போனதும் அவர்கள் குறிப்பை புரிந்து கொண்ட ஆழ்வார் மெதுவாக திண்ணையை விட்டிறங்கி வெளியே செல்லத்தொடங்கினார். அவர் புறப்பட்டதை அறிந்த அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத தொடங்கினர். இந்த பாகவத அபச்சாரம் செய்ததில் அவர்கள் எந்த இடத்தில் வேதத்தை விட்டோம் என்று புரியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைக் கண்ட ஆழ்வார் தம் வாயால் வேதத்தை உச்சரிக்க கூடாதாகையாலே அவர்களுக்கு விட்ட இடத்தை நினைவூட்டுவதற்காக, அருகில் இருந்த கருப்பு நெல்லை எடுத்து அதை தம்முடைய நகத்தாலே பிளந்து, அவர்கள் விட்ட வாக்கியத்தை நினைவூட்டினார். "நகத்தினால் கிழிப்பட்ட கருநெல்லில் உள்ள அரிசி" எனும் பொருள் பொதிந்த வாக்கியம் வரை சொன்னது அவர்களுக்கு நினைவுக்கு வர மிகுந்த ஆச்சர்யத்துடன் எதிரில் நிற்பவர் சாதாரண மனிதர் அல்லர் பெரிய ஞானப்பண்டிதராக இருக்க வேண்டும் என்றெண்ணி தாங்கள் செய்த தவறை எண்ணி வெட்கப்பட்டு அவர் பாதம் பணிந்து தண்டனிட்டு உபசரித்து பேறு பெற்றனர். அவர்களிடம் ஆழ்வாரும் கணிக்கண்ணனும் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர்கள் பெருமையை எண்ணி அந்தணர்கள் மகிழ்ச்சியுற்று, "தாங்கள் இங்கேயே தங்கியிருந்து இவ்வூரில் நடக்கும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும், பெரும்புலியூர் பரந்தாமனை போற்றி பாட வேண்டும்" என்று விண்ணப்பித்தனர். ஆழ்வாரும் அவர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி அவ்வூரிலேயே பிச்சை எடுத்து அமுது செய்தனர். தினமும் அவரது அமுத பாசுரங்களைக் கேட்டு அவ்வூர் மக்கள் பேரானாந்தம் அடைந்தனர். 

ஆழ்வாரும் கணிக்கண்ணனும் பாசுரங்களைப் பாடிக் கொண்டு வீதிவழியே செல்லும் போது கோவிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.  அக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஆழ்வார் எந்த திசையை நோக்கி பாடிக் கொண்டு செல்கிறாரோ அந்தந்த திசையில் எல்லாம் தமது கழுத்தை சற்று சாய்த்து செவிமடுப்பதை, ஒவ்வொரு திசையாக திரும்பி திரும்பி ஆழ்வார் பாடிச் செல்லும் பாட்டை ரசித்தபடியே இருந்ததை, அர்ச்சகர்கள் கண்டு வியப்படைந்தனர்.  உடனே ஓடிச் சென்று யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடியார்களிடம் நடந்ததை கூறினர். அது கேட்டு பேரானாந்தம் கொண்ட அடிகளார் ஓடிவந்து ஆழ்வாரை எதிர்க்கொண்டு அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவ்விருவரையும் யாகத்தை சிறப்பித்துக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். அதன்படியே அவ்விருவரும் யாகசாலைக்கு வர, அடிகளார் ஆழ்வாரை உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து அவரைக் கொண்டே யாகத்தை தொடங்கச் செய்தார்.  இச்செயலைப் பார்த்து பொறாமை பட்ட சில அந்தணர்கள் ஆழ்வாருடைய ஜாதியைப் பற்றி கேலி செய்து பலவாறு பழித்தனர். அதுக்கேட்டு அடிகளார் பெரிதும் வருத்தமுற்று ஆழ்வாரின் பெருமைகளை எடுத்துரைத்தார். அவர்கள் அது கேட்காமல் விதண்டாவாதம் செய்தபடியே இருந்ததை பார்த்த ஆழ்வார் இவருக்காகவாவது பழிப்வர்களிடம் நம் பெருமையை காட்டியே தீரவேண்டும் என்றெண்ணி, "சக்கரத்தை திருக்கரம் பெற்ற திருமாலே! என் உள்ளத்தினுள்ளே நீ உறங்கும் வண்ணம் எனது புற உடம்பிலும் உனது திவ்ய மங்கள திருமேனியைக் காட்டி, இக்குறும்பை நீக்கி அடியவனையும் உன்னை போல் ஈசனாக்கி இவ்வேள்வி சடங்கர்களுக்கு நல்லறிவு உண்டாகச் செய்திடல் வேண்டும்" என்னும் பொருள்படும்படியான "அக்கரங்க ளக்கரங்க" என்று தொடங்கும் பாசுரத்தை மெய்மறந்து பாடி விண்ணப்பம் செய்தருள, எம்பெருமான் அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானுமாய் இவருடைய திருமேனியிலே அவர்கள் அனைவரும் காணுமாறு காட்சி தர, பழித்த அந்தணர்கள் அனைவரும் எம்பெருமானை ஆழ்வாரின் திருமார்பிலே கண்ணாரக் கண்டு, அவர் திருவடியிலே விழுந்து மன்னிப்பு கோரி, அவருக்கு ப்ரஹ்மரதம் பண்ணி, கௌரவித்துத் திருமாலடியாரை பூஜிக்கும் பேறு பெற்றார்கள். அதற்குப் பின் ஆழ்வாரும் அவர்களுக்குப் பல உபதேசங்களைச் செய்தருளி வாழ்வித்து, திருக்குடந்தையை நோக்கி தனது யாத்திரையை தொடங்கினார்.  

குடந்தையில் காவிரியின் மருங்கிலே கோவில் கொண்டிருக்கும் ஆராவமுத பெருமானை தரிசித்து பாசுரங்கள் பாடினார். தாம் எழுதிய பாசுரங்களை பெருமான் அங்கீகரிக்க வேண்டும் என்று ஆழ்வார் விரும்பினார். தாம் எழுதிய பாசுரங்களை திருமுடித்தாங்கி ஆழ்வாரும் கணிக்கண்ணனும், பெரியோர்கள், பண்டிதர்கள் புடைசூழ பெருமானின் திருவடியில் ப்ரபந்த ஏடுகளை சமர்ப்பித்து, பின் அதை எடுத்துக் கொண்டு காவிரிக்குச் சென்று, மாலவனை மனதில் தியானித்து, வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கும் காவிரியில் அந்த ஏடுகளை விட்ட போது, அதில் இரண்டு ஏடுகள் மட்டும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து ஆழ்வாரின் திருவடியில் தங்கியது. (அந்த இரண்டு ஏடுகள் தான் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என்னும் இரண்டு திவ்ய ப்ரபந்தங்கள் ஆகும்) அந்த ப்ரபந்த ஏடுகளை கையில் எடுத்துக் கொண்டுதிருக்கோவிலை அடைந்து எம்பெருமானின் திருவடியில் சமர்ப்பித்து எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார்.  பெருமானின் பெருங்கருணையை கண்டு வியந்து கண்ணீர் மல்க, "காவிரிக்கரை மருங்கில் ஆராவமுதா எனக்காக நடந்து வந்த உமது திருவடிகள் நொந்து போயினவா? துயில் கொள்ளும் நீ எழுந்து வந்து இந்த எளியவனோடு பேசு" என்று ப்ரார்த்தனை செய்தார். அக்கணமே ஆராவமுதன் பேரொளி பொங்க தமது அற்புதக் கோலாகல வைபவக் காட்சியைக் காட்டினார். ஆழ்வார் ஆராவமுதப் பெருமானின் ஏரார்க் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடினார். அந்த எம்பெருமானின் திருமேனியையே தியானம் செய்துக் கொண்டு பல வருஷங்கள் யோகத்தில் எழுந்தருளியிருந்து, அந்த திவ்ய தேசத்திலேயே திருநாட்டுக்கு எழுந்தருளினார். ஆராவமுதன், அர்ச்சாரூபியாகத் திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் அமுது செய்த ப்ரஸாதத்தையே அமுது செய்வது என்னும் நியமத்தை மேற்கொள்வதன்மூலம் தனது பக்தபாரதந்தர்யத்தை காட்டி அருளினான் என்றும், அதனாலேயே திருமழிசை ஆழ்வாருக்கு திருமழிசைப்பிரான் என்றும், ஆராவமுதனுக்கு ஆராவமுதாழ்வார் என்றும் திருநாமங்கள் வழங்கி வருகின்றன என்றும் பெரியோர்கள் சொல்லுவர். 

திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என்னும் ப்ரபந்தங்களை பாடினார். அவரால் திருவிண்ணகர், திருக்கோஷ்டியூர், திருவரங்கம், திருஅன்பில், திருக்குடந்தை, திருப்பேர் நகர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருவெஃகா, திருப்பாடகம், திருவேங்கடம்திருப்பாற்கடல், திருதுவாரகை, திருஎவ்வுள், திருஊரகம், திருவல்லிக்கேணி, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

No comments:

Post a Comment