Monday 25 June 2012

நம்மாழ்வார் வைபவம் - 1


கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தில் உள்ள திருகுருகூரில் 'காரி' என்பவருக்கு குமாரராய் 'சேனைமுதலியார்' எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாய் அவதரித்த சடகோப்பரை உபாஸிக்கிறேன்.

கலியுகத்தின் முதல் வருஷத்தில், வைகாசி விசாகத்தில், உலகங்களையெல்லாம் ரக்ஷிக்கும் விஷ்ணு பக்தியை நிலை நிறுத்துவதற்காகசேனை முதலியாரின் அம்சமாக, அவருடைய அருளினால் த்வயம் என்னும் திவ்யமந்திரத்தை உபதேசிக்க பெற்றவரும், திராவிட வேதத்தை அருளியவருமான சடகோப முனிவரை தியானிக்கிறேன்.

வேதத்தின் உத்திர காண்டமாகிய உபநிஷத்தைத் தமிழ் மொழியில் வெளியிட்ட உலகுக்கெல்லாம் அலங்காரபூதராய், மகிழ்மாலை மார்பினரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

கலியுகத்தில் பிரமாதி என்ற முதல் வருடத்தில், வைகாசி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் விசாக நக்ஷத்திரத்தில், சுக்லபக்ஷம் சதுர்தசியுடன் கூடிய அழகிய கடகலக்னத்தில், 'ஸ்ரீவிஜ்ஞாந' என்னும் எழுத்துக்களால் ஏற்படும் நாற்பத்திரண்டு தினங்கள் சென்றபின் 'லாப' என்னும் எழுத்துக்களால் கிடைக்கும் நாற்பத்து மூன்றாவது கலித்தினத்தில், வஸந்தருதுவில்நம்மை போன்றவர்களின் நல்வினைப்பயனாக மற்ற ஆழ்வார்களை அவயங்களாக கொண்டவரும், ப்ரபன்ன ஜநகூடஸ்தருமான பராங்குசர் அவதரித்தார்.

பாண்டிய நாட்டில் தாமிரபரணிக் கரையில் உள்ள திருக்குருகூரில் வேளாள வருணத்தில் எம்பெருமானுக்கே தொண்டு புரிந்து வரும் குலத்தில் பிறந்த திருவழுதிவளநாடர் என்னும் பரம பாகவதர் வாழ்ந்து வந்தார். அவர் குமாரர் அறந்தாங்கியார் என்பவர். அவர் பிள்ளை சக்ரபாணியார். அவர் பிள்ளை அச்சுதன். அவர் பிள்ளை செந்தாமரை கண்ணர். அவர் குமாரர் செங்கண்ணர். அவர் பிள்ளை பொற்காரியார். அவர் குமாரர் காரியார். அவருடைய திருக்குமாரர் தான் 'மாறன்' என்றும், 'சடகோபன்' என்றும், 'பராங்குசன்' என்றும் பேர் பெற்றவரான உலகுய்ய வந்து அவதரித்தவர் நம்மாழ்வார்.

பொற்காரியார் தமது பிள்ளையான காரியாருக்கு திருமணம் செய்ய எண்ணி, மலைநாட்டில் 'திருவண்பரிசாரம்' என்னும் திருப்பதியில் உள்ள 'திருவாழ்மார்பர்' என்னும் திருமாலடியவருடைய குமாரத்தியான 'உடையநங்கை' என்பவருக்கு மணம் பேசி முடித்து, விவாஹ மஹோத்ஸவத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார்.

காரியார் தன் மனைவி உடையநங்கை எனும் குணவதியோடு இல்லற வாழ்க்கையில் இருந்தபடி எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது ஈகை பல செய்து வந்தார். தன் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை இவர்களை வாட்டி எடுத்தது. ஒரு முறை இவர் தன் மனைவியுடன் தன் மாமனாரின் ஊர் சென்று திரும்பும் வழியில் திருக்குறுங்குடி என்னும் ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பி எம்பெருமானை சேவித்து தன் மனக்குறையைக் கண்ணீர் சிந்தி முறை இட்டார். இருவரும் கண்ணீர் சொரிந்தபடி வேண்டியவாறே கண்ணுறங்கினர். தன்னை நம்பி வாழும் பக்தர்களுக்கு அனைத்தையும் தந்துதவும் மாலவன் அன்றிரவு இருவர் கனவிலும் தோன்றி "நீங்கள் நற்கதியடையும் பொருட்டும் உலகம் உய்யும் பொருட்டும் என் அம்சமே அருஞ்செல்வனாகத் தோன்றும். வருத்தம் நீங்குவீராக" என்று கூறி மறைந்தார்.

விடிந்ததும் மிக ஆனந்தத்தோடு இறைவனை வணங்கி மாலை ப்ரஸாதங்களை பெற்றுக் கொண்டு திருகுருகூருக்கு எழுந்தருளி வாழ்த்து வருகையில் உடையநங்கையார் கருத்தரிக்க, எம்பெருமான் பாரெல்லாம் உய்யும்படி சேனை முதலியாரை நம்மாழ்வாராக அவதரிக்கும்படி நியமிக்க, மேலே கூறியபடி கலி பிறந்த நாற்பத்து மூன்றாவது நாளில் கலித்தோஷத்தை அகற்றுவதற்காக விஷ்வக்சேனரின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தருளினார். இப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாகவும், சேனைமுதலியாருடைய அம்சமாகவும் ஆழ்வார் அவதரிப்பதற்கு முன்பே "சென்றால் குடையாம்" என்ற ரீதியில், திருவநந்தாழ்வான் என்பவர் இவர் மீது மழை வெய்யில் முதலியன படாமல் ரக்ஷிப்பதற்காக திருகுருகூரில் ஒரு புளியமரமாக அவதரித்து வளர்ந்திருந்தான்.

நம்மாழ்வார் பிறந்த மாத்திரத்திலேயே ஞானமும் பிறந்தது. குழந்தை பிறந்த அன்று தொடங்கி அழுவது, தாய்ப்பால் உண்பது முதலிய உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமல் இருந்த போதிலும் பகவதனுபவத்தாலே எந்த வாட்டமும் இல்லாது வளர்ந்து வந்தார். அவ்வதிசயத்தை கண்ட பெற்றோர் எம்பெருமான் மீது பாரத்தை போட்டு, பிறந்த பன்னிரெண்டாம் திருநாள் அன்று திருகுறுகூரில் எழுந்தருளியிருக்கும்  பொலிந்து நின்ற பிரான் சன்னதிக்கு குழந்தையை எடுத்துக் சென்று, பிரானை சேவிக்கப்பண்ணி வைத்து, அப்பெருமான் திருமுன்பே பக்தி மயக்கத்திலே இருக்கும் அந்த தெய்வக்குழந்தைக்கு, உலக நடைக்கு மாறாக இருந்ததினால் 'மாறன்' என்ற திருநாமம் சூட்டி வளர்த்து வந்தனர். தத்தி விளையாட வேண்டிய குழந்தை பெருமானையே சுற்றிச்சுற்றி வந்தது கண்டு பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் அக்குழந்தை அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் அமர்ந்து அசைவற்று ஐம்புலன் அடக்கம் பூண்டது. அங்கேயே கண் விழிக்காமலும் வாய் திறந்து பேசாமலும் எதையும் உண்ணாமலும் மௌனமாகவே பதினாறு ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்திருந்தது.

எம்பெருமான் சேனைமுதலியாரை அனுப்பி, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்வித்து எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்க செய்து மயர்வற மதிநலம் அருளினான். கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தைகளின் அறிவை மறைக்கும் சடவாயுவை - பிறக்கும்போதே தம்மை மேலிடாதபடி ஹூங் காரத்தாலே ஓட்டியவராகையால் இவருக்கு 'சடகோபர்' என்றும், திருவுள்ளம் உகந்து பொலிந்து நின்ற பிரான் ப்ரஸாதித்தருளிய மகிழ்மாலையை தரித்ததினால் 'நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்' என்றும் 'மகிழ்மாலை மார்பினர்' என்றும் 'வகுளாபரணர்' என்றும் திருநாமங்கள் பெற்றார்.

Tuesday 19 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 5



பக்தர் புடைசூழ கணிக்கண்ணனுடன் திருமழிசை ஆழ்வார் எம்பெருமானை வணங்கி விடைப்பெற்று ஒருநாள் திருக்குடந்தை தலயாத்திரைப் புறப்பட்டார். வழியெங்கும் வைஷ்ணவ ஷேத்திரங்களை தரிசித்து கொண்டே வந்தனர். பெரும்புலியூர் என்னும் திருத்தலத்தை வந்தடைந்த போது அந்த ஊரில் எங்காவது ஓரிடத்தில் கொஞ்சம் இளைப்பாரிச் செல்லலாம் என்று ஆழ்வார் எண்ணினார். அந்தணர் வசிக்கும் வீதி வழியாக ஆழ்வாரும் கணிக்கண்ணனும் வந்து கொண்டிருந்தபடியால் ஒரு அந்தணர் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தனர். அந்த வீட்டில் அந்தணர்கள் அனைவரும் ஒன்றுகூடி வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். திண்ணையில் வந்தமர்ந்த இவ்விருவரையும் பார்த்து அவர்கள் பெருமையை அறியாமல் வேற்று மதத்தினர் என்றெண்ணி "அவர்கள் கேட்கும்படியாக நாம் வேதம் சொல்லுவது அந்த வேத முதல்வனுக்கு செய்யும் அபச்சாரம் ஆகும்" என்று வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர். வேத ஒலி நின்று போனதும் அவர்கள் குறிப்பை புரிந்து கொண்ட ஆழ்வார் மெதுவாக திண்ணையை விட்டிறங்கி வெளியே செல்லத்தொடங்கினார். அவர் புறப்பட்டதை அறிந்த அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத தொடங்கினர். இந்த பாகவத அபச்சாரம் செய்ததில் அவர்கள் எந்த இடத்தில் வேதத்தை விட்டோம் என்று புரியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைக் கண்ட ஆழ்வார் தம் வாயால் வேதத்தை உச்சரிக்க கூடாதாகையாலே அவர்களுக்கு விட்ட இடத்தை நினைவூட்டுவதற்காக, அருகில் இருந்த கருப்பு நெல்லை எடுத்து அதை தம்முடைய நகத்தாலே பிளந்து, அவர்கள் விட்ட வாக்கியத்தை நினைவூட்டினார். "நகத்தினால் கிழிப்பட்ட கருநெல்லில் உள்ள அரிசி" எனும் பொருள் பொதிந்த வாக்கியம் வரை சொன்னது அவர்களுக்கு நினைவுக்கு வர மிகுந்த ஆச்சர்யத்துடன் எதிரில் நிற்பவர் சாதாரண மனிதர் அல்லர் பெரிய ஞானப்பண்டிதராக இருக்க வேண்டும் என்றெண்ணி தாங்கள் செய்த தவறை எண்ணி வெட்கப்பட்டு அவர் பாதம் பணிந்து தண்டனிட்டு உபசரித்து பேறு பெற்றனர். அவர்களிடம் ஆழ்வாரும் கணிக்கண்ணனும் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர்கள் பெருமையை எண்ணி அந்தணர்கள் மகிழ்ச்சியுற்று, "தாங்கள் இங்கேயே தங்கியிருந்து இவ்வூரில் நடக்கும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும், பெரும்புலியூர் பரந்தாமனை போற்றி பாட வேண்டும்" என்று விண்ணப்பித்தனர். ஆழ்வாரும் அவர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி அவ்வூரிலேயே பிச்சை எடுத்து அமுது செய்தனர். தினமும் அவரது அமுத பாசுரங்களைக் கேட்டு அவ்வூர் மக்கள் பேரானாந்தம் அடைந்தனர். 

ஆழ்வாரும் கணிக்கண்ணனும் பாசுரங்களைப் பாடிக் கொண்டு வீதிவழியே செல்லும் போது கோவிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.  அக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஆழ்வார் எந்த திசையை நோக்கி பாடிக் கொண்டு செல்கிறாரோ அந்தந்த திசையில் எல்லாம் தமது கழுத்தை சற்று சாய்த்து செவிமடுப்பதை, ஒவ்வொரு திசையாக திரும்பி திரும்பி ஆழ்வார் பாடிச் செல்லும் பாட்டை ரசித்தபடியே இருந்ததை, அர்ச்சகர்கள் கண்டு வியப்படைந்தனர்.  உடனே ஓடிச் சென்று யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடியார்களிடம் நடந்ததை கூறினர். அது கேட்டு பேரானாந்தம் கொண்ட அடிகளார் ஓடிவந்து ஆழ்வாரை எதிர்க்கொண்டு அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவ்விருவரையும் யாகத்தை சிறப்பித்துக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். அதன்படியே அவ்விருவரும் யாகசாலைக்கு வர, அடிகளார் ஆழ்வாரை உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து அவரைக் கொண்டே யாகத்தை தொடங்கச் செய்தார்.  இச்செயலைப் பார்த்து பொறாமை பட்ட சில அந்தணர்கள் ஆழ்வாருடைய ஜாதியைப் பற்றி கேலி செய்து பலவாறு பழித்தனர். அதுக்கேட்டு அடிகளார் பெரிதும் வருத்தமுற்று ஆழ்வாரின் பெருமைகளை எடுத்துரைத்தார். அவர்கள் அது கேட்காமல் விதண்டாவாதம் செய்தபடியே இருந்ததை பார்த்த ஆழ்வார் இவருக்காகவாவது பழிப்வர்களிடம் நம் பெருமையை காட்டியே தீரவேண்டும் என்றெண்ணி, "சக்கரத்தை திருக்கரம் பெற்ற திருமாலே! என் உள்ளத்தினுள்ளே நீ உறங்கும் வண்ணம் எனது புற உடம்பிலும் உனது திவ்ய மங்கள திருமேனியைக் காட்டி, இக்குறும்பை நீக்கி அடியவனையும் உன்னை போல் ஈசனாக்கி இவ்வேள்வி சடங்கர்களுக்கு நல்லறிவு உண்டாகச் செய்திடல் வேண்டும்" என்னும் பொருள்படும்படியான "அக்கரங்க ளக்கரங்க" என்று தொடங்கும் பாசுரத்தை மெய்மறந்து பாடி விண்ணப்பம் செய்தருள, எம்பெருமான் அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானுமாய் இவருடைய திருமேனியிலே அவர்கள் அனைவரும் காணுமாறு காட்சி தர, பழித்த அந்தணர்கள் அனைவரும் எம்பெருமானை ஆழ்வாரின் திருமார்பிலே கண்ணாரக் கண்டு, அவர் திருவடியிலே விழுந்து மன்னிப்பு கோரி, அவருக்கு ப்ரஹ்மரதம் பண்ணி, கௌரவித்துத் திருமாலடியாரை பூஜிக்கும் பேறு பெற்றார்கள். அதற்குப் பின் ஆழ்வாரும் அவர்களுக்குப் பல உபதேசங்களைச் செய்தருளி வாழ்வித்து, திருக்குடந்தையை நோக்கி தனது யாத்திரையை தொடங்கினார்.  

குடந்தையில் காவிரியின் மருங்கிலே கோவில் கொண்டிருக்கும் ஆராவமுத பெருமானை தரிசித்து பாசுரங்கள் பாடினார். தாம் எழுதிய பாசுரங்களை பெருமான் அங்கீகரிக்க வேண்டும் என்று ஆழ்வார் விரும்பினார். தாம் எழுதிய பாசுரங்களை திருமுடித்தாங்கி ஆழ்வாரும் கணிக்கண்ணனும், பெரியோர்கள், பண்டிதர்கள் புடைசூழ பெருமானின் திருவடியில் ப்ரபந்த ஏடுகளை சமர்ப்பித்து, பின் அதை எடுத்துக் கொண்டு காவிரிக்குச் சென்று, மாலவனை மனதில் தியானித்து, வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கும் காவிரியில் அந்த ஏடுகளை விட்ட போது, அதில் இரண்டு ஏடுகள் மட்டும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து ஆழ்வாரின் திருவடியில் தங்கியது. (அந்த இரண்டு ஏடுகள் தான் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என்னும் இரண்டு திவ்ய ப்ரபந்தங்கள் ஆகும்) அந்த ப்ரபந்த ஏடுகளை கையில் எடுத்துக் கொண்டுதிருக்கோவிலை அடைந்து எம்பெருமானின் திருவடியில் சமர்ப்பித்து எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார்.  பெருமானின் பெருங்கருணையை கண்டு வியந்து கண்ணீர் மல்க, "காவிரிக்கரை மருங்கில் ஆராவமுதா எனக்காக நடந்து வந்த உமது திருவடிகள் நொந்து போயினவா? துயில் கொள்ளும் நீ எழுந்து வந்து இந்த எளியவனோடு பேசு" என்று ப்ரார்த்தனை செய்தார். அக்கணமே ஆராவமுதன் பேரொளி பொங்க தமது அற்புதக் கோலாகல வைபவக் காட்சியைக் காட்டினார். ஆழ்வார் ஆராவமுதப் பெருமானின் ஏரார்க் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடினார். அந்த எம்பெருமானின் திருமேனியையே தியானம் செய்துக் கொண்டு பல வருஷங்கள் யோகத்தில் எழுந்தருளியிருந்து, அந்த திவ்ய தேசத்திலேயே திருநாட்டுக்கு எழுந்தருளினார். ஆராவமுதன், அர்ச்சாரூபியாகத் திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் அமுது செய்த ப்ரஸாதத்தையே அமுது செய்வது என்னும் நியமத்தை மேற்கொள்வதன்மூலம் தனது பக்தபாரதந்தர்யத்தை காட்டி அருளினான் என்றும், அதனாலேயே திருமழிசை ஆழ்வாருக்கு திருமழிசைப்பிரான் என்றும், ஆராவமுதனுக்கு ஆராவமுதாழ்வார் என்றும் திருநாமங்கள் வழங்கி வருகின்றன என்றும் பெரியோர்கள் சொல்லுவர். 

திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என்னும் ப்ரபந்தங்களை பாடினார். அவரால் திருவிண்ணகர், திருக்கோஷ்டியூர், திருவரங்கம், திருஅன்பில், திருக்குடந்தை, திருப்பேர் நகர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருவெஃகா, திருப்பாடகம், திருவேங்கடம்திருப்பாற்கடல், திருதுவாரகை, திருஎவ்வுள், திருஊரகம், திருவல்லிக்கேணி, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

Sunday 10 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 4


ஒரு நாள் திருமண் காப்பு சாத்திக் கொள்வதற்காக தேடினார் எங்கும் கிடைக்காமையால் மிகவும் கவலை அடைந்தார்.. அன்றிரவு எம்பெருமான் அவரது கனவில் தோன்றி, கச்சிவெஃகாவை அடுத்த பொற்றாமரைப் பொய்கையிலே திருமண் உள்ளதாக கூறினார். இவர் கவலை மறந்து அங்கு சென்று திருமண் இருப்பது கண்டு பெருமிதம் அடைந்து எடுத்து வந்து எம்பெருமான் நாமங்களை உச்சரித்துக் கொண்டே தரித்துக் கொண்டு பகவதனுபவம் செய்கின்றவராய் சில காலம் கழித்து வந்தார். நாமங்களை சொல்லிக் கொண்டே தரித்துக் கொள்வதனால் தான் அதற்கு திருநாமம் என்ற பெயர் வந்தது. பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த திருவெஃகாவில் அரவணை மேல் பள்ளிக் கொண்டிருக்கின்ற பெருமாளுக்கு தொண்டு செய்துக் கொண்டு பல வருடங்கள் அங்கேயே எழுந்தரியிருந்தார்.  திருமழிசை ஆழ்வாரை தரிசித்துப் போக பக்தர்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்தனர். திருமழிசை ஆழ்வாரின் வளர்ப்புத் தாய்-தந்தையர் வந்தனர். 

கணிக்கண்ணனும் அவனது பெற்றோர்களும் வந்தனர். கணிக்கண்ணன் அவரது பாதத்தில் விழுந்து வணங்கி, "தங்கள் அருளால் பிறந்த இந்த எளியோனுக்கு, தங்களுக்கு கைங்கரியம் செய்யும் பெரும் பாக்கியத்தை எனக்கு தந்தருள வேண்டும்" என்று ப்ரார்த்தித்துக் கொண்டான். அதன் படி கணிக்கண்ணன் தனது ஆச்சார்யரான திருமழிசை ஆழ்வாருக்கு பலவிதமாக தொண்டு செய்து கொண்டு உஞ்சவ்ருத்தி செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான். 

அவ்வூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருத்தியும் ஆழ்வார் தங்கியிருக்கும் இடத்தை அனுதினமும் இரண்டு வேளையும் திருவலகிடுதல், மொழுகுதல், கோலம் இடுதல் முதலான கைங்கர்யங்களை செய்து வந்தாள். ஒரு நாள் வேடிக்கையாக அந்த மூதாட்டியை பார்த்து, "அம்மா உங்களது கைங்கர்யத்துக்கு என்ன சன்மானம் தரலாம்" என்று கேட்டார் ஆழ்வார். "ஸ்வாமி தங்களுக்கு பல்லாண்டு சேவை புரிந்து வர இந்த வயோதிகமும் சோர்வும் மிகத் தடையாக உள்ளது, அதை நீக்குவதற்கு அருள் செய்தால் போதும்" என்று கூற "அதன்படியே ஆகட்டும்" என்று கூறி அருள் பொங்கும் திருக்கண்ணால் அவளை பார்த்தார்.  அந்த க்ஷணமே தேவப்பெண் போல் ஸ்வரூபத்தை பெற்றாள். அந்த அதிசயத்தைக் கண்டு ஊரே ப்ரமிப்பில் ஆழ்ந்தது.  காஞ்சி மாநகரை ஆண்ட பல்லவ மன்னன் ஒரு நாள் யானை மீது வந்து கொண்டிருந்த போது இந்த பெண்மணியை பார்த்து விட்டான்.....அவளது அழகில் மயங்கிய மன்னன் அரண்மனை சென்ற பின்பும் அவள் நினைவாகவே இருந்தான். இரவில் தூக்கமின்றி தவித்தான். மறுநாள் முத்துப்பல்லக்கில் அவளை அழைத்து வரும் படி காவலரை அனுப்பினான். அவர்களும் அவ்விதமே அழைத்து வர அவளிடம் அரசன் தான் காதலை வெளிப்படுத்த அந்த பெண்ணும் நாணத்தோடு சம்மதம் தெரிவிக்க அரசன் அவளை திருமணம் செய்துக் கொண்டான். ஆழ்வாரின் அருளால் இளமை பெற்ற அந்த பெண்ணுடன் பல காலம் சந்தோஷமாக இல்லறம் நடத்திய அரசன் முதுமை அடைந்தான். ஆனால் அப்பெண்ணோ இளமை பூத்துக் குலுங்கும் அழகோடு அன்று கண்ட மேனியோடு எப்போதும் போல காணப்பட்டாள். 

அவளது இளமை ரகசியம் என்ன என்பதை மன்னரால் உணர முடியவில்லை. அதை ராணியிடமே கேட்க.. இதற்கு மேலும் மறைக்க விரும்பாத ராணி உண்மையை எடுத்துரைத்தாள். அவ்வருளை தானும் அடைவதற்கு உபாயத்தாய்க் கேட்டான் அரசன். அதற்கு அவள், "தினமும் உஞ்சவ்ருத்திக்கு வருகிற கணிகண்ணன் என்பவர் அந்த யோகிக்கு அந்தரங்க சிஷ்யர் ஆவர். அவரை புருஷகாரமாகக் கொண்டு திருமழிசைப்பிரானை வணங்கினால் நீர் விரும்பியது கிட்டும்" என்றுரைத்தாள். அவ்வாறே மறுநாள் கணிகண்ணன் வரும் போது அவரை உபசரித்து, "உமது ஆச்சார்யரை நான் சேவிப்பதற்காக இங்கு அழைத்து வரவேண்டும்" என்று ப்ரார்த்திக்க, "எமது ஆச்சார்யர் எங்கும் எழுந்தருளார்" என்று கூறிவிட, அரசன், "என்னையாவது அவரிடம் அழைத்துச் சென்று அவருடைய கருணைக்கு இலக்காக்கி அவரது அருளால் என்னை என்றும் மாறாத இளமை பேறுடையவனாக ஆக்க வேண்டும்" என்று வேண்ட, அதற்கும் அவர் உடன்படவில்லை. அதைக் கேட்டு அரசன் வருந்தி நிற்கையில் அமைச்சர்கள் அவரை தேற்றி, தெய்வ புலமையுடைய இக்கணிகண்ணன் வாயினால் பாடினாலே பல அற்புதங்கள் நிகழ்கின்றன, இவரால் பாடப்பெற்றால் நீங்கள் விரும்பியது கைக்கூடலாம்" என்று கூறினர். அவர் கணிகண்ணனிடம், "எனக்கு மாறாத இளமை வரும்படி தாங்கள் கவிப்பாட வேண்டும்" என்று கூற, "மன்னா, பகசை வண்ணனை பாடும் வாயால் மானுடனை பாடுவதா ஒரு காலும் அது செய்ய மாட்டேன்" என்றுரைத்தார்."அரசனும் ஆண்டவனும் ஒன்று தானே" என்று அரசன் கூற, "அப்படியானால் நான் ஆண்டவனையே பாடுகிறேன்" என்று கூறி பாடத் தொடங்கினார். தன்னை பாடாததால் கோபம் கொண்ட அரசன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டான். "இந்நாட்டில் மட்டும் என் அரங்கன் பள்ளிக்கொள்ளவில்லை 108 திவ்ய தேசங்களிலும் பள்ளிக் கொண்டிருக்கின்றான். நான் போய்விட்டால் என் குருநாதரும் வந்து விடுவார்...அவரோடு அனந்தனும் வந்து விடுவான் இது உறுதி என்று கூறி விட்டு குருநாதரிடம் வந்து நடந்தததை கூறி, " தாங்களுக்கு இந்த எளியவன் செய்யும் பணியில் இப்படி தடை வரும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று வருத்தத்துடன் கூறி ஆழ்வாரை அநேக தண்டனிட்டு புறப்பட தயாரானார். "கணிக்கண்ணா! என்னை நீ இப்படி தனியாக விட்டுவிட்டு செல்லலாமா? நீ எனது சிஷ்யன் மட்டும் அல்லவே உற்ற நண்பனும் அல்லவா? நீயில்லாத காஞ்சியில் நான் மட்டும் எப்படி இருப்பேன். வா இதை பெருமானிடமே முறையிடுவோம்" என்று சொல்லி கணிக்கண்ணனை கட்டித் தழுவிக் கண்ணீர் சொரிந்தார் திருமழிசை ஆழ்வார்.

"கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
  செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமூன்றன்
 பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்"

என்று திருமழிசை ஆழ்வார் வைகுண்ட நாதனையும் தம்மோடு வருமாறு கூறிவிட்டு கணிக்கண்ணனுடன் புறப்பட்டார். எம்பெருமானும் அவ்வண்ணமே நாகத்தணையை சுருட்டிக் கொண்டு, ஆழ்வார் பின்னே எழுந்தருளினார். மூவரும் அவ்வூரை விட்டு அகன்று ஓரிடத்தில் தங்கினார்கள். இப்படி இம்மூவரும் நீங்கியதால் மற்ற தெய்வங்களும் அவர்களைப் பின்தொடர காஞ்சி நகரமே வாட்டமுற்றது.  மறுநாள் கோயிலின் கதவைத் திறந்த அர்ச்சகர்கள் எங்கு திருமாலின் விக்ரகம் இல்லாததுக் கண்டு அதிர்ச்சியுற்று மன்னவனிடம் சென்று முறையிட்டனர். தெய்வக்குற்றம் நிகழ்ந்தது போல் அழுதனர். அதைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியுற்றான். அடியவருக்கு செய்த தவறினால் தான் பெருமானும் போய்விட்டார் என்பதை உணர்ந்து வருந்தினான். உடனே அமைச்சர்கள் புடைசூழ அவர்கள் இருப்பிடம் தேடி வந்து கணிக்கண்ணனின் காலில் விழுந்து வணங்கி கலங்கி மன்னிப்பு கேட்டார். கக்சிக்கு திரும்பும்படி ப்ரார்த்தித்தார். கணிக்கண்ணனும் திருமழிசை ஆழ்வாரைப் ப்ரார்த்திக்க, ஆழ்வாரும் அடியாருக்கு எளியவனான எம்பெருமானை,

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
     செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமூன்றன்
                                             பைந்நாகப் பாய் படுத்துக் கொள்"

என்று ப்ரார்த்திக்க, அவனும் உடன்பட்டு ஆழ்வாரோடும் கணிக்கண்ணனோடும் புறப்பட்டு திருவெஃகாவை அடைந்து, அங்கு முன்பு போல் வலத்திருக்கையை கீழ் வைத்து படுக்காமல் இடத்திருக்கையை கீழ்ப்படத் தலைமாடு கால்மாடாக மாறி எழுந்தருளினான்.  இப்படி ஆழ்வார் சொன்னபடி செய்தமையாலே அவர்க்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று தமிழிலும், "யதோக்தகாரீ" என்று வடமொழியிலும் அன்று முதல் திருநாமம் வழங்காலாயிற்று. அம்மூவரும் ஓர் இரவு தங்கியிருந்த அந்த ஊர் "ஓரி(ரவிரு)க்கை" என்று அன்று முதல் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. அம்மூவரும் திரும்பியப்பின் கச்சி நகரம் முன்போல பொலிவு பெற்றது. அரசனும் பாகவதர்களுடைய பெருமையை உணர்ந்து ஆழ்வாருக்கும் கணிக்கண்ணனுக்கும் அடியானாக வாழ்ந்து பேறு பெற்றான்.

Thursday 7 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 3


திருமழிசை ஆழ்வார், பேயாழ்வாரின் பேரருளோடு ஒரு நாள் திருவேங்கட கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள திருவல்லிக்கேணி என்னும் திருநகரை அடைந்தார். அங்கு தங்கியிருந்து தினமும் அல்லிக்குளத்தில் நீராடி மூலமூர்த்தியான பார்த்தசாரதியையும் சேவித்து சிந்தை மகிழ்ந்தார். அதன் பிறகு அங்கேயே அவர் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

ஒரு நாள் ருஷப வாகனத்தில் பார்வதியும் சிவனும் ஆகாய மார்கமாக வந்து கொண்டு இருந்தார்கள். பார்வதி இவருடைய தேஜசைப் கண்டு வியப்புற்று, "இவர் யார்" என வினவ, சிவபிரான், "இம்மஹானுபாவர் நம் அடிமையாய் இருந்து இப்போது நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருப்பவர்" என்று சொன்னவுடன் உமாதேவி, "அத்தகைய பெரியவருக்கு நாமும் காட்சி தந்து ஏதாவது வரம் அளித்து விட்டு செல்வோம்" என்று கூற, அவள் விருப்பப்படி திருமழிசைப்பிரான் முன் தோன்றினார். ஆனால் திருமழிசை ஆழ்வார் அவரை பார்க்காதது போல் ஒரு கந்தைத் துணியைத் தைத்து கொண்டிருந்தார். இருப்பினும் தன் வரவு வீணாகக் கூடாது என்றெண்ணிய சிவபிரான், "நீ விரும்பிய வரத்தை பெற்று வாழ்வாய்" என்று நிர்ப்பந்தமாக கேட்க, அது கேட்ட ஆழ்வார், "மோக்ஷலோகமான பரமபதத்தை அருளவல்லீராகில் அருள்வீர்" என்றார். அதற்கு மஹாதேவர், "அது நம்மால் இயலாது, அதை தரவல்லவன் முகுந்தன் ஒருவனே. அது தவிர வேறு வரம் கேள்" என்று கூற, திருமழிசை ஆழ்வார் புன்முறுவல் செய்து, "அந்த முக்தியை பெறுவதற்கு ஸாதனங்களை அனுஷ்டிப்பதற்கு உறுப்பாக நீண்ட ஆயுளையேனும் எனக்கு தரவேண்டும்"  என்று கேட்க அதற்கு கைலாசநாதர், " அது கர்மானுக் குணமாக ஏற்கனவே வரம்புக் கட்டப்பட்டுவிட்டது. அதை வளரச் செய்ய என்னால் ஆகாது. வேறு வரம் வேண்டுவாய்" என்று வினவ திருமழிசைபிரான் இகழ்ச்சி தோன்ற நகைத்தார். அது கண்ட சிவபிரான் சினம்கொண்டு, "செருக்குடைய உன்னை இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்" என்று கூறி நெற்றிக்கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஊழிக்கால நெருப்புப் போலே அக்னி கிளர்ந்து எழுந்தது. அது கண்ட திருமழிசை பிரான், "இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்" என்று சொல்லித் தமது வலத்திருவடியில் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஒரு பெரும் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பலமடங்கு பெரியதாகி, நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பாய் அடக்கி, முக்கண்ணனையும் சுடத் தொடங்கிற்று. அது கண்ட சிவபிரான் அதிலிருந்து தப்பிக்க தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் காலத்திற்போலே மழை பொழியும் படி நியமித்தார். அவ்வண்ணமே அம்மேகங்களும் மழை பொழிந்ததனால் பெருவெள்ளம் ஏற்படவும், பரம பாகவதரான திருமழிசை ஆழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை த்யானித்துக் கொண்டு வீற்றிருந்தார். அதை கண்டு சிவபிரான் ஆழ்வாருக்கு, "பக்திஸாரர்" என்று நாமம் சூட்டி அவரை மிகக் கொண்டாடி கைலாயம் சேர்ந்தார்.

அதற்குப்பின் ஆழ்வார் முன்போலவே யோகத்தில் எழுந்திருக்கையில், அஷ்டமாசித்தி பெற்ற சுத்திஹாரன் என்னும் சித்தன் புலி மீது அமர்ந்து விண்வழியே வந்து கொண்டு இருந்தான். நிஷ்டையிலிருந்த திருமழிசை ஆழ்வாருக்கு மேற்கு புறமாக அந்த சித்தன் சென்ற போது புலியின் வேகம் தடைப்பட்டது. ஒன்றும் புரியாது திகைத்துப்போய் கீழே பார்த்தான் அந்த சித்தன்.  அல்லிக்குளத்தருகே பெரும் ஜோதி ஒன்று தெரிய பூமிக்கு இறங்கினான் சித்தன். ஞானத்தவமிருக்கும் திருமழிசை ஆழ்வாரின் நிஷ்டாகினியின் ஒளியே அந்த ஜோதி என்பதையும் அதுவே தனது புலியின் ஓட்டத்தை தடுத்தது என்பதையும் புரிந்துக் கொண்டான். கந்தல் ஆடையுடன் தவத்திலிருந்த ஆழ்வாரிடம் ஒரு பட்டுத்துணியை வரவழைத்து, "இதோ இந்த பட்டாடையை உடுத்திக் கொண்டு உம் கந்தலாடையை தூக்கி எறியும்" என்றான் அவன்.  அவனுடைய சித்த வேலைகளை புரிந்து கொண்ட ஆழ்வார் தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே மாணிக்கமயமானதொரு கவசத்தை உண்டாக்கி அவனிடம் கட்டினார். சூரியன் போல ஒளிவீசும் அதைக்கண்டு வெட்கம் அடைந்த புலிவாஹனன், தன் கழுத்தில் இருந்ததொரு மணிமாலையை எடுத்து "இதனை ஜபமாலையாக தரித்துக் கொள்ளும்" என்று கொடுக்க முற்பட, மழிசைப்பிரான் தம் கழுத்திலிருந்த துளசி மணிமாலைகளையும், தாமரை மணிமாலைகளையும் எடுத்துக் கட்டினார். அவை மிகச் சிறந்த நவரத்தின மாலைகளாக விளங்கக் கண்ட புலிவாஹனன்  வெட்கப்பட்டு "எல்லா சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதனால் உம்மைக்காட்டிலும் சிறப்புடைய ஸித்த புருஷன் உலகெங்கிலும் இல்லை" என்று சொல்லி துதித்து நமஸ்காரம் செய்து வேறு வழியாக சென்றுவிட்டான்.   

மேலும் அவர் அங்கு யோகம் செய்து கொண்டிருக்கையில், 'கொங்கண ஸித்தன்' என்னும் ரஸவாதி ஒருவன் அவர் பெருமையை கேள்விப்பட்டு அவரிடம் வந்து, கோடி இரும்பை பொன்னாக்கவல்ல ரஸக்குளிகையைக் காட்டி, "இதை பெற்று மகிழ்வீர்" என்று கூற, அது கேட்டு திருமழிசைப்பிரான் அதை விலக்கி, தமது மேனியின் புழுதியை ஒன்றாக திரட்டி, "இக்குளிகை பலக் கோடி கற்களைப் பொன்னாக்க வல்லது. இதைக் கொண்டு நீ பிழைத்துக் கொள்" என்று கொடுக்க, அவன் அதை உடனே பரிசோதித்து பார்த்து அப்படியே இருக்கக் கண்டு பெரும் வியப்புற்று, அவரை தண்டனிட்டு சென்றான். இதிலிருந்து எம்பெருமான் அருளாலே ஆழ்வாருக்கு எல்லா ஸித்திகளும் கைவந்திருந்தன என்றும், அவர் அவற்றை ஒரு பொருளாகவே மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. இப்படி பலபேரால் இடையூறு வருவதை தவிர்ப்பதற்காக யார் கண்ணிலும் படாமல் நிஷ்டையில் இருக்க நினைத்த அவர் திருவல்லிக்கேணியிலிருந்து நீண்ட தூரம் நடந்து சென்றார். 

ஒரு மலைப் பகுதியில் தென்பட்ட குகையொன்றில் அவர் தவம் செய்ய தொடங்கினார். 
அது சமயம் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் திருக்கோவில் தலயாத்திரை மேற்கொண்டு வந்து கொண்டிருந்தபோது இந்த குகை வழியே அவர்கள் கவனம் சென்றது.  குகையை சுற்றிலும் இதுவரை காணாத பேரொளியொன்றைக் கண்டனர். திருமழிசையாழ்வாரின் தேகத்தினின்றும் வீசிய மணம் அம்மூவரையும் கவர்ந்தது. வைகுந்தனை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தி தலை தாழ்த்தி வணங்கி மெல்ல குகைக்குள் கால் வைத்து நடந்தனர்.  தன்னை மறந்து யோகத்தில் ஆழ்ந்துள்ள ஞானப்பிழம்பாகிய திருமழிசையாழ்வாரைத் திருக்கண்களால் கண்டு அவர் திருவடிகளைத் தொட்டு வணங்கி நின்றனர்.  அப்போது திருமழிசையாழ்வாரும் கண் திறந்து பார்க்க மூன்று ஆழ்வார்களும் நிற்பதைக் கண்டு பேரின்பம் அடைந்து அவர்களைக் கட்டித் தழுவி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினார். திருமாலின் பெருமையைப் பற்றி அந்நால்வரும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்துக்கூடி அங்கேயே சில காலமிருந்து, எம்பெருமானுடைய குணங்களை ஒருவருக்கொருவர் கூறுதல், கேட்டல், சிந்தித்தல், துதித்தல், அனுபவித்தல் முதலியன செய்துக் கொண்டு தவம் செய்திருந்தார்கள்.  அதன் மிறகு நால்வரும் பேயாழ்வாருடைய திரு அவதார ஸ்தலமான திருமயிலைக்கு வந்து, அவ்வாழ்வார் அவதரித்த அல்லிக் குளக்கரையில் சில ஆண்டுகள் யோகம் செய்த பின்னர் முதலாழ்வார்கள் மூவரும் திவ்யதேச யாத்திரைக்குப் புறப்பட்டனர். திருமழிசை ஆழ்வார் திருமழிசைக்கு புறப்பட்டார்.

Saturday 26 May 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 2


தினமும் பால் காய்ச்சி சமர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதியருக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்க திருவுள்ளம் பற்றியது அக்குழந்தை.  எப்போதும் பால் முழுவதையும் அருந்தி விடும் அக்குழந்தை அன்று அந்த பாலை மீதம் வைத்துவிட்டது. நீங்களும் அருந்துங்கள் என்று சொல்வது போல் ஜாடைக் காட்டியது. அதை அருந்தி விட்டு அவர்களும் வீடு திரும்பினர். அந்த பாலின் சக்தியினால் அவர்கள் இருவருக்கும் வியோதிகம் நீங்கி வாலிபம் திரும்பியது. இளமை உணர்வுகள் கரையுடைத்து பொங்கியது. வாழ்க்கையில் இருவரும் இன்புற்றிருந்த சமயம் மனைவி கருவுற்றாள். தெய்வக் குழந்தையின் சக்தியால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு 'கனிக்கண்ணன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஊரார்கள் இது கண்டு அதிசயித்து அந்த தெய்வக் குழந்தையை திருமழிசையார் என்றே வணங்கி பெருமதிப்பும் பக்தியும் கொண்டனர். அந்த தம்பதியர் கனிக்கண்ணனை திருமழிசையார் முன்னிலையில் கொண்டு வந்து விட, அவரது கடாக்ஷத்திலே நல்ல அறிவைப் பெற்று, அவருக்கு சிஷ்யன் ஆகி, பாகவத நிஷ்டனாகி, இருவரும் தோழர்களாக வளர்ந்து வந்தார்கள்.  

திருமழிசையார் ஏழு வயது வரை அவரை வளர்த்தவர்களோடு வாழ்ந்து வந்தார். பின்னர் ஐம்புலன்களையும் அடக்கி அஷ்டாங்க யோகத்தால் முழுமுதற் கடவுளை அடைய விரும்பினார். உலகின் முதற்பொருளை உணர்ந்த பின்னரே யோகத்தில் அமர வேண்டும் என்று எண்ணிய அவர் அதற்குரிய வழியை ஆராய எல்லா சமய நூல்களையும், தத்துவங்களையும் கண்டறிய எண்ணினார். சாக்கியம், சமணம் என்னும் பல நூல்களை கற்றுணர்ந்தார். தெளிவு பிறக்காமல் சைவ நூல்களையும் ஆராய்ந்தார். பல தலங்களுக்குச் சென்று வேதத்தை ஒப்புக்கொள்ளாத பிற சமயங்கள், வேதத்தை ஒப்புக்கொண்டும் அதற்கு அவப்பொருள் கூறும் குத்ருஷ்டி மதங்களான அகச்சமயங்கள் ஆகிய ஒவ்வொரு மதத்திலும் அந்தந்த மதத்திற்கு தக்க ஒழுக்கத்தோடு அவற்றில் ஊன்றி நின்று ஆராய்ந்து பார்த்து, அவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டு அவற்றிலிருந்து விலகி கடைசியில் உலகிற்கு மூலப்பொருளாக நிற்பது சிவம் ஒன்றேயாகும் என்று முடிவு கட்டி யோகங்கள் பலவும் செய்து சித்தராக மாறினார். 

தொண்டை மண்டலத்தில் உள்ள சைவ, வைணவ க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே வந்த திருமழிசையார் திருமயிலையில் உள்ள பேயாழ்வார் அமைத்துள்ள நந்தவனத்தை வந்தடைந்தார்.  அங்கே துளசி செடியின் அருகே நெற்றியில் திருமண் துலங்க துளசி மணி மாலைகளும், தாமிரபரணி மாலைகளும் அணிந்துக் கொண்டு யோகத்தில் ஆழ்ந்து திருத்துழாய்முடியன் ஸ்ரீமந்நாராயண தியானத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீவைஷ்ணவ சீலரான பேயாழ்வாரைக் கண்டார். அவரைக் கண்டதும் திருமழிசையார் மனதில் ஒருவித உணர்ச்சி ஏற்பட்டது. அவரது தேஜசைப் பார்த்து கொண்டிருந்த மாத்திரத்திலேயே அவரை தமது ஞான குருவாக வரித்துக் கொண்டார்.  அப்போது கண்விழித்தார் பேயாழ்வார்.  திருமழிசையார் அவரை வணங்கி, "ஸ்வாமி அடியேன் திருமழிசையார்" என்றார். திருமழிசையார் பெரிய யோகி, தத்துவ மேதை, சைவத்தில் ஆழ்ந்த பற்றுடையவர், பிற மதங்களை கைவிட்டவர் என்றெல்லாம் பலர் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறார் பேயாழ்வார். அவருக்கு உண்மைகளை எடுத்துரைத்து அவரை ஸ்ரீவைஷ்ணவனாக ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபட எண்ணிய பேயாழ்வார் "அப்படியா, அடியேனை பேயன் என்றழைப்பார்கள். உம்மை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தும் உலகம் அனைத்திற்குமான மூலக்காரணமும் பரம்பொருளுமான முழுமுதற்பெருமான் ஸ்ரீமந்நாராயணனைப் பற்றி உணராது போனீரே!" என்று கூறினார். அதன் பிறகு இருவருக்கும் வாதம் ஏற்பட ஆயிரக்கணக்கான வசனங்களையும் நியாயங்களையும் எடுத்து உரைத்து கடைசியில் திருமழிசையாரை வெற்றி கொண்டார் பேயாழ்வார்.  அவரின் கருத்துகளில் மனத்தை பறிக்கொடுத்த திருமழிசையார் வைஷ்ணவத்தை மிகவும் பெருமையோடும் பூறிப்போடும் மனங்குளிர ஏற்றுக்கொண்டார். 

 மனம் திருந்திய அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களோடு மந்த்ரா அர்த்தங்களையும் திருமழிசையார் செவியில் முறைப்படி  உபதேசித்தார் பேயாழ்வார். ஸ்ரீமந்நாராயண மந்த்ரம் செவிகளில் பாய்ந்ததும் திருமழிசையார் பரம விஷ்ணு பக்தரானார். அத்திருமந்த்ர மகிமையால் ஸ்ரீமந்நாராயணனை தன் அகக்கண்களால் கண்டார். சிரத்தின் மீது ஆரம் உயர்த்தி கைதொழுது அநேக தண்டனிட்டு, கண்களில் நீர் மல்க மெய்மறந்து பலவாறாக பாசுரங்களைப் பாடி பெருமானைத் துதித்தார் திருமழிசையார்.  அதைக் கண்டு பேரானாந்தம் அடைந்த பேயாழ்வார் எம்பெருமானை சிந்தையிற்கொண்டு யோக நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். திருமழிசையாரும் அவரை வணங்கி விடைப் பெற்று திருமழிசைக்கு வந்து யோக நிலையில் நின்று திருமகள் கேள்வனை தியானித்துக் கொண்டிருந்தார். சுதர்சனத்தின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீவைஷ்ணவ பக்தரான அவர், சக்கரம் போன்று சுழன்று சுழன்று பல மதங்களில் உருண்டும் கிடந்தும் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் திருவடிக்கமலம் கிடப்பதே மெய்யான பொருள் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டார். அவருக்கு கருடாழ்வார் மீது பரந்தாமன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சேவை சாதித்தார்.

Friday 25 May 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1


மகிசாரக்ஷேத்ரம் என்னும் பெயருடைய திருத்தலம் திருமழிசையாகும். இறைவளமும் இசைவளமும் ஒருங்கே நிரம்பப்பெற்ற திருத்தலம் திருமழிசையாகும்.  திருமழிசை கோவிலில் எப்போதும் வேதம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தணர்கள் அக்கோவிலைச் சுற்றி குடியிருந்தனர். அத்திருத்தலத்தின் தபோவனத்தில் முனிவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் பார்கவ முனிவரும் அவரது மனைவி கனகாங்கியும் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற கவலையும் இருந்தது.  இருவரும் இல்லத்தில் இருந்துக் கொண்டே வானப்ரஸ்தத்தை அடைவதற்கான வழிகளை கடைப்பிடித்தனர். அப்போது பார்கவ முனிவரும் மற்ற முனிவர்களோடு சேர்ந்து தீர்க்கசத்திர யாகம் நடத்தி வந்தார். அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள்.  ஆனால் அவரது மனைவிக்கோ பத்து மாதமாகியும் குழந்தையும் பிறக்கவில்லை வலியும் எடுக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்ற அவர்களை எம்பெருமான் சோதிக்க நினைத்தார்.

 
சித்தார்த்தி ஆண்டு தை மாதம் கிருஷ்ணபட்சம் ப்ரதமை திதி ஞாயிற்றுக்கிழமை மகம் நக்ஷத்திரத்தில் திருமாலின் திருக்கரங்களிலே ஒளிவிடும் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக கனகாங்கி வயிற்றில் இருந்து அங்கங்களே இல்லாத ஒரு ஜீவன் பிறந்தது. பிள்ளைக்காக ஏங்கி தவித்த எங்களுக்கு இப்படி உருவமே இல்லாத பிள்ளை பிறந்ததே நாங்கள் என்ன தவறு செய்தோம். யாகம் செய்தும் பலனில்லையே என எண்ணிக் கலங்கினர். இனி துன்பப்பட்டு ப்ரயோஜனம் இல்லை குழந்தை பாசத்தில் உழன்றால் பகவத் கைங்கர்யத்திற்கு தடை ஏற்படும் என்பதற்காக தான் பரமன் இப்படி ஒரு ஜீவனை கொடுத்தார் என்று நினைத்த வண்ணம் அப்பிண்டத்தை கையிலேந்திக் கொண்டு ஊருக்கு வெளியில் உள்ள பிரம்பு புதருக்கு அருகில் சென்றனர்.  கொண்டு வந்த பிண்டத்தை பார்த்து கலங்கினர். இனி வருந்த கூடாது என்றெண்ணி கொண்டு வந்த தூய மெல்லிய ஆடையை மெத்தென்று மடித்து புதரின் கீழ் வைத்து அதன் மேல் அப்பிண்டக் குழந்தையை வைத்தார். அதை விட்டு பிரிய மனமின்றி அதையே சிறுது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தனர். எத்தனை நேரம் பார்த்தாலும் இந்த பிண்டம் குழந்தையாக போவதில்லை என்று நினைத்துக் கொண்டே மனைவியை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முனிவர்.

அப்போது திருமால் பிராட்டியாருடன் பிரம்பு புதரில் எழுந்தருளி உறுப்புகள் இல்லாத ஜீவன் திருக்கண் மலர அனுக்கிரகம் செய்தார்.  பிராட்டியாரும் அருள் பாலித்தார்.  திருமால் கடாட்சமும் திருமகள் கடாட்சமும் பெற்ற அந்த ஜீவன் தங்கம் என ஜொலித்தது. பேரொளி பொங்கும் திருவருட்செல்வமாக கை-கால்களை அசைத்து குவா-குவா என்று கேட்பவர்கள் நெஞ்சம் துடிக்கும் அளவுக்கு அழுதது. பிரம்பைக் கொண்டு பல தொழில் செய்து பிழைக்கும் திருவாளன் என்பவன் அந்த சமயம் அங்கு வந்தான்.  பிரம்பறுக்க வந்தவன் பேரொளி பொங்கும் அந்த குழந்தையை கண்டான். அது தெய்வக் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று நினைத்தான். தனக்கு பிள்ளையில்லா குறை தீர்க்க ஆண்டவனே அக்குழந்தையை கொடுத்திருக்கிறான் என்றெண்ணிய படி அக்குழந்தையை வெள்ளாடையோடு எடுத்துக்கொண்டதும் அக்குழந்தை அழுகையை நிறுத்தியது.

தனக்கு கிடைத்த பொக்கிஷம் என நினைத்து அக்குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்தான். தாயன்போடு வாங்கி உச்சி மோர்ந்து முத்தமிட்டாள்.  மறுகணமே தாயன்பு மிகுதியால் அவளுக்கு மார்பில் பால் சுரந்துவிட்டது. அந்த குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி பாலை குடுக்க தொடங்கிய போது அக்குழந்தை பாலை குடிக்க மறுத்து விட்டது.  தாய்ப்பாலையோ தண்ணீரையோ பழத்தையோ உண்ணாமல் சொர்ணவிக்ரஹம் போல் சயனித்து இருந்தது. அக்குழந்தையின் இந்த செயல் புரியாத அவர்கள் கடவுளை பிரார்த்தித்தனர். அதிசயமான அந்த குழந்தையை பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அதை பார்க்க வருகை தந்தநர்.அக்குழந்தையால் திருமழிசைக்கே ஒரு பொற்காலம் வந்தது போல் நினைத்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அக்குழந்தையை பார்க்க ஒரு வயதானவர் தன் மனைவியோடு வந்தார். இருவருமே திருமால் அடிமைகள். பல ஆண்டுகளாகியும் குழந்தை செல்வம் இல்லாத குறையோடு இருந்தனர். இந்த அதிசய குழந்தையை பற்றி கேள்விப்பட்டு அதை பார்க்க வந்தனர். அதற்கு கொடுப்பதற்காக மதுரமான பால் கொண்டு வந்திருந்தனர். அதை பார்த்த பங்கஜவல்லி 'ஐயா! இக்குழந்தை இதுவரை எதையும் உண்டதில்லை" என்று சொன்னாள். ஆனால் அவர்களோ வெள்ளிக்கிண்ணத்தில் பாலை எடுத்து "திருமாலின் திருஅவதரமாக திருமழிசையில் அவதரித்துள்ள அருட்செல்வமே எங்கள் மனக்குறை நீங்க பாலை பருகி மகிழ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு பாலை புகட்டவும் குழந்தை புன்முறுவல் பூத்த வண்ணம் பாலை பருகிவிட்டது. அதை கண்டு அனைவரும் ஆச்சர்யமுற்றனர். "என்ன தவப்பயனோ தாங்கள் கொடுத்த பாலை பருகி விட்டது இக்குழந்தை. தாங்கள் எங்கள் மீது கருணைக் கொண்டு நாள்தோறும் வந்து பால் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்றனர் திருவாளனும் பங்கஜவல்லியும். அதன்படியே தினமும் வந்து பால் புகட்டிச் சென்றனர் தம்பதியர்.

Sunday 20 May 2012

முதலாழ்வார்கள் வைபவம்


மூன்று ஆழ்வாரும் திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்து விட்டு ஒரு ஆசிரமம் நோக்கி விரைந்தார்கள் என்பதை பார்த்தோம்.  ஆசிரமத்திற்குள் கண் அயர்ந்தார் பொய்கை ஆழ்வார். அப்போது படபடவென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் கண்களை சுற்றும் நிலையில் இருந்த அவர் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். 

கொட்டும் மழையில் நனைந்தபடி அடியார் போல யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்."ஸ்வாமி! இந்த கும்மிருட்டில் இப்படி கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு இக்குடிசைக்கு வந்துள்ள அடியார் தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்று கேட்டார் பொய்கை ஆழ்வார். "இந்த எளியவனை உள்ளே ஏற்று கொள்வீரோ?" என்று அவர் பணிவோடு கேட்டார். "தாராளமாக வாருங்கள். இந்த உள்நடையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்.. தேவரீர் தாங்கள் உள்ளே வந்து எம்மோடு அமருங்கள்.""அடியேன் பூதத்தான்" என்று உள்ளே வந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் "அடியேன் பொய்கையான்" என்று இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.ஆழ்வார்  இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டதும் பேரானந்தம் அடைந்தனர்.   

பரந்தாமனின் லீலா வினோதங்களில் லயித்துப் போய் நெடுநேரம் பேசிக் கொண்டே இருந்தனர்.  நள்ளிரவு ஆகியும் இருவரும் தூங்கவில்லை. எம்பெருமானின் சுகானுபவத்தில், பேச்சில் திளைத்துக் கொண்டிருந்தபோது திடீரென யாரோ ஆசிரமத்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. பொய்கை ஆழ்வார் கதவை திறந்து எட்டி பார்த்தபோது அடியவர் ஒருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பதைக் கண்டார்.

 "தாங்கள் அடியவர் போலிருக்கிறீர். யாரென்று அறிந்துக் கொள்ளலாமா" என்றார் பொய்கை ஆழ்வார். "அடியேன் பெயர் பேயன். உமது ஆசிரமத்தில் எமக்கு இந்த இரவு மட்டும் தங்க இடம் தரவேண்டும்." "அதற்கென்ன உள்ளே வாருங்கள். நான் பொய்கையன், உள்ளே பூதத்தார் இருக்கிறார். இக்குடிலின் ரேழியில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். வாருங்கள் உள்ளே" என்று கூறி பேயாழ்வாரை உள்ளே அழைத்துச் சென்றார் பொய்கை ஆழ்வார்.  சிறிய இடம் காரணமாக மூவரும் எழுந்து நின்றபடியே க்ஷேமலாபங்களை பேசினர்.

"பொய்கையாரே! எங்கள் இருவராலே தங்கள் உறக்கமும் கெட்டது. தாங்களுக்கு வீண் சிரமம் கொடுத்து விட்டோம்" என்று பேயாழ்வாரூம் பூதத்தாழ்வாரும் கூறினர். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஸ்வாமி. நாம் மூவரும் ஒன்றாக வேண்டும் என்பது உலகளந்த உத்தமனின் ஆணைப்போலும்" என்றார் பொய்கை ஆழ்வார்.

உண்மையே அது தானே. பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முப்பெரும் ஆழ்வார்களையும் ஒன்று சேர்க்க ஏற்ற இடத்தையும் காலத்தையும் எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு எண்ணியதின் விளைவு தானே இது.

முதலாழ்வார்கள் மூவருமே ஒரே ஆண்டில் ஒரே திங்களில் தொடர்ந்து வந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து பிறந்துள்ளனர். மூவரும் தாய் வயிற்றில் பிறக்காமல் தனித்தனி மலர்களில் திருமாலின் படைகளின் அம்சமாகவே தோன்றினார்கள். இறைவனின் திருவருளால் ஞானாசிரியர் இல்லாமலேயே அனைத்துத் துறை நூல்களையும் கற்றுத் தெளிந்தனர்.

பெருமானையன்றி பெரிய தெய்வம் இல்லையென்று எண்ணி அவனையே அல்லும் பகலும் அயராது வழிப்பட்டு வந்தனர். மாநில மக்கட்கு அவனின் பெருமைகளையே எடுத்துக் கூறினர். மூவெரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே பல்வேறு இடங்களுக்குச் சென்று பரந்தாமன் வீற்றிருக்கும் கோவில்களை கண்டு சேவித்து வந்தனர். ஒரு நாள் முப்பெரும் ஆழ்வார்கள் கனவிலும் தோன்றி "இந்நாளில் திருக்கோவிலூரிலுள்ள த்ரிவிக்ரமனையும் பூங்கோவல் நாச்சியாரையும் கண்டு வழிபடுவீராக" என்று கூறி மறைந்தான் பெருமான்.  வெவ்வேறு இடங்களில் உறங்கிக் கொண்டிருந்த ஆழ்வார்கள் கனவுக்குப் பின் விழித்தெழுந்தனர். இறைவன் திருவருளைக் கண்டு வியந்தனர்.

அம்மூவரும் ஒரே நாளில் திருக்கோவிலூரை வந்தடைந்தனர். பெருமானைக் காண உள்ளே சென்றனர். பெருமானின் திருவருளைக் கண்குளிரக் கண்டனர். அவன் பெருமையை பைந்தமிழ் பாசுரங்களால் பாடி தொகுத்த்தனர். பகல் பொழுது கழிந்து இரவு பொழுது வந்தது. மழையும் சூறைக்காற்றும் ஒன்று சேர தங்க இடம் தேடி மூவரும் ஆசிரமம் வந்து சேர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள பெருமான் பிராட்டியாரின் பெருமைகளை பற்றியும், தீர்த்த மகிமைய்களைப் பற்றியும், திருத்தல வைபவத்தைப் பற்றியும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம் வெண்ணையுண்ட கண்ணன் மூவரும் அறியா வண்ணம் தாயாரோடு அந்த இடைகழியில் வந்து நின்றான். சிறிய ரேழியில் எப்படியோ சிரமப்பட்டு நின்று கொண்டிருக்கும் அம்மூவருக்கும் திடீரென நெருக்கம் அதிகமாயிற்று. எவரோ மத்தியில் புகுந்து நெருக்குவது போல தோன்றிற்று. அந்த உணர்வு மூவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது.

"என்ன ஆச்சர்யம்! திடீரென எதனால் நமக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது?" என்று அவர்கள் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்து கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். எவரும் இல்லை. ஞானக்கண்ணாகிய விளக்கை அவர்கள் மூவரும் ஏற்றி பார்த்த போது உண்மை விளங்கி விட்டது. திருமாலின் திருவிளையாடலை உணர்ந்து மூவரும் அன்புக் கண்ணீர் வடித்தனர். அப்போது அந்த இடத்தில் பேரொளி பிறந்தது. ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியாருடன் அம்மூவருக்கும் ப்ரத்யட்சண்யமானார்.  பரந்தாமனின் திருக்கோலம் கண்டு மூவரும் தனித்தனியே பாமாலை சூட்டி கண்ணில் நீர்மல்க நின்றனர்.

பொழுது புலர்ந்தது. ஆழ்வார்கள் மூவரும் பெண்ணையாற்றில் நீராடி திருமண் தரித்து துளசிமணி மாலைகளும் நவமணிகளும் துலங்க நாராயணனின்  நாமத்தை போற்றிய வண்ணம் பற்பல திருத்தலங்களை தரிசித்த வண்ணம் தங்களுடைய தலயாத்திரையை மேற்கொண்டனர்.

பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்கோவிலூர், திருவெஃகா, திருவேங்கடம்,  திருப்பாற்கடல்,  திருபரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. பாஞ்ச சன்னியம் எனப்படும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்த அவர் பூவுலகம் உய்ய பெருந்தொண்டு ஆற்றினார்.

பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருதஞ்சை மாமணிக்கோயில், திருக்கோவிலூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருவேங்கடம், திருத்தண்கா, திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. எத்தனையோ வழிகளில் பக்தர்களுக்கு பேரின்ப பாதையினை காட்டி பைந்தமிழ் பாசுரங்களைப் பதியச் செய்த பின்பு திருமாலின் திருக்கரம் தாங்கும் சுக்ருதத்தை முன்போல் திரும்பவும் பெற்று பிறவாப் பெருவாழ்வு வாழ்ந்தார். உலகம் முழுவதும் அறிவுச் சுடர் ஏற்றி ப்ரகாசிக்கச் செய்து ஞான ஒளியிலே நானிலம் போற்றும் ஸ்ரீமந்நாராயணனைக் கண்டார்.

பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருவிண்ணகரம், திருக்கச்சி, திருக்கோவிலூர், அஷ்டபுயகரம், திருவேளுக்கை, திருப்பாடகம், திருவெஃகா, திருவல்லிக்கேணி, திருக்கடிகை, திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம்  முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்


                                                                பேயாழ்வார்

திருமயிலையில் வைஷ்ணவக் கோயில்கள் பல இருந்தாலும் ஸ்ரீ ஆதிக்கேசவ பெருமாள் கோவில் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த கோவிலின் அருகில் திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டு இருந்தது. அந்த கிணற்றின் தண்ணீர் தேங்கிய நீர் போல மிகச் சுவையை பெற்றிருந்தது. அந்த கிணற்றின் அமைப்பும் தண்ணீரின் சுவையும் அனைவரையும் இன்பத்தில் மூழ்க வைத்தது. அதில் எப்போதும் தண்ணீர் மேல் மட்டம் வரைக்கும் வற்றாமல் சிறப்பு தன்மையோடு இருந்தது. அப்படி தெய்வீகத்  தன்மையுடைய அந்த கிணற்றில் அதுவரைக்கும் யாருமே பார்த்திராத வண்ணம் புதுமையான பூவொன்று பூத்தது. அதை செவ்வல்லி என்று அழைப்பார்கள்.

சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறை தசமி திதி, வியாழக்கிழமை சதய நக்ஷத்திரத்தில் கண்ணன் தாங்கிய ஐந்து படைகளில் ஒன்றான நரந்தகம் என்னும் வாளின் அம்சமாக செவ்வல்லி மலரில் தேஜசோடு கூடிய தெய்வக் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த அடுத்த க்ஷணமே புன்முறுவல் பூத்த அந்த குழந்தையை சுற்றி பேரொளி பொங்கியது. குருகுலத்தில் சேர்ப்பதற்கு முன்னமே கொஞ்சும் தமிழ் அதன் நாக்கினில் பிறள ஆரம்பித்தது. நெகிழ வைக்கும் தமிழ் பாசுரங்களை நினைத்த நேரத்தில் பாடி வியக்க வைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணனுமாய் எம்பெருமான் நாமத்தை ஜபிக்க தொடங்கியது. எந்த பருவத்திலும் எம்பெருமானை பற்றிய பிதற்றலைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் இப்படி பித்தனாக வாழ்கிறானே என்று அவரை பேயன் என்று அழைத்தனர் பக்தர்கள். அடியார்களும் பக்தர்களும் அவரை பேயாழ்வார் என்று போற்றிக் கொண்டாடினர்.

கண்ணனின் வாளின் கூறாகப் பிறந்ததால் கூரிய அறிவுடையவராக திகழ்ந்தார். நீதி நூல்கள், அறநூல்கள், மதநூல்கள், பொதுவான நூல்கள் அனைத்தையும் எம்பெருமானாகிய ஆசானைக் கொண்டே முழுமையாகக் கற்று பெரும் அறிவோடு திகழ்ந்தார். நிறைக்குடமாக விளங்கிய பேயாழ்வார் எம்பெருமானின் அவதாரத்தைப் பற்றியும் அவர் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் நினைத்து நினைத்து பூரிப்படைந்தார். அல்லிக் கிணற்றில் பூத்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அனந்தனின் திருவடியில் சேர்த்து "நாராயணா நாராயணா" என்று நாள்பொழுதும் அவன் பெருமைகளை பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார்.

பேயாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடி பரமனையே நேரில் கண்டது போல் பெருமிதம் அடைந்தனர்.  பேயாழ்வார் தொண்டை மண்டலத்து க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் சென்று பரந்தாமனை சேவிக்க பெரும் ஆவல் கொண்டார். தமது யாத்திரையை தொடங்கி வைஷ்ணவ பதிகளைச் சென்றடைந்து பாசுரங்களால் பரமனை போற்றி பணிந்தார். இறுதியாக பெருமாள் விருப்பப்படியே திருக்கோவிலூருக்கு வந்தடைந்தார். திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்துக் களித்த நேரம் இரவாகிப் போன போது மழையும் புயலும் சேர்ந்து கொண்டது.  எங்கேயாவது அந்த இரவுப் பொழுதில் தங்கி களைப்புற விரும்பிய அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  அங்கே அருகில் முனிவர் ஆசிரமம் ஒன்று இருக்க கண்டு அங்கே போய் பூட்டி இருந்த கதவை தட்டினார்.

நிற்க: முதலாழ்வார்கள் மூவரின் சரித்திரத்தை தனித்தனியே பார்த்தோம். மூவரும் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ஆசிரமம் நோக்கி வந்த வரையில் பகிர்ந்து கொண்டோம். இனி மூவரும் சேர்ந்து என்னென்ன கைங்கர்யங்கள் புரிந்தனர் என்பதை பகிர்ந்து கொள்வோம்.

Friday 18 May 2012

முதலாழ்வார்கள் வைபவம் - பூதத்தாழ்வார்

                                                             பூதத்தாழ்வார்: 

கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும் இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடு போல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள் நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.

இந்த மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்ட நக்ஷத்திர நாளில் திருமாலின் அம்சமான கதாயுதமே குழந்தையாக பிறந்தது.

ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்த குழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர்.

அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும் அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும் கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர். முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல்  மண்ணுயிரைப் பேணிக் காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.

அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.

'நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.

கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ் பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு தொண்டை மண்டலத்திலுள்ள மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சுற்றிருக்கும் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு தொடர்ந்து சென்று எம்பெருமானை தரிசித்து வந்தார். உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின் ப்ரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி அவருக்கு கனவில் உரைத்தார். திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு திருக்கோவிலூர் சென்றார் அவர். அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு, இரவு தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு ஆசிரமம் தென்படவே அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்.  

நிற்க இந்த இடத்தில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.