Sunday 20 May 2012

முதலாழ்வார்கள் வைபவம்


மூன்று ஆழ்வாரும் திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்து விட்டு ஒரு ஆசிரமம் நோக்கி விரைந்தார்கள் என்பதை பார்த்தோம்.  ஆசிரமத்திற்குள் கண் அயர்ந்தார் பொய்கை ஆழ்வார். அப்போது படபடவென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் கண்களை சுற்றும் நிலையில் இருந்த அவர் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். 

கொட்டும் மழையில் நனைந்தபடி அடியார் போல யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்."ஸ்வாமி! இந்த கும்மிருட்டில் இப்படி கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு இக்குடிசைக்கு வந்துள்ள அடியார் தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்று கேட்டார் பொய்கை ஆழ்வார். "இந்த எளியவனை உள்ளே ஏற்று கொள்வீரோ?" என்று அவர் பணிவோடு கேட்டார். "தாராளமாக வாருங்கள். இந்த உள்நடையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்.. தேவரீர் தாங்கள் உள்ளே வந்து எம்மோடு அமருங்கள்.""அடியேன் பூதத்தான்" என்று உள்ளே வந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் "அடியேன் பொய்கையான்" என்று இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.ஆழ்வார்  இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டதும் பேரானந்தம் அடைந்தனர்.   

பரந்தாமனின் லீலா வினோதங்களில் லயித்துப் போய் நெடுநேரம் பேசிக் கொண்டே இருந்தனர்.  நள்ளிரவு ஆகியும் இருவரும் தூங்கவில்லை. எம்பெருமானின் சுகானுபவத்தில், பேச்சில் திளைத்துக் கொண்டிருந்தபோது திடீரென யாரோ ஆசிரமத்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. பொய்கை ஆழ்வார் கதவை திறந்து எட்டி பார்த்தபோது அடியவர் ஒருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பதைக் கண்டார்.

 "தாங்கள் அடியவர் போலிருக்கிறீர். யாரென்று அறிந்துக் கொள்ளலாமா" என்றார் பொய்கை ஆழ்வார். "அடியேன் பெயர் பேயன். உமது ஆசிரமத்தில் எமக்கு இந்த இரவு மட்டும் தங்க இடம் தரவேண்டும்." "அதற்கென்ன உள்ளே வாருங்கள். நான் பொய்கையன், உள்ளே பூதத்தார் இருக்கிறார். இக்குடிலின் ரேழியில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். வாருங்கள் உள்ளே" என்று கூறி பேயாழ்வாரை உள்ளே அழைத்துச் சென்றார் பொய்கை ஆழ்வார்.  சிறிய இடம் காரணமாக மூவரும் எழுந்து நின்றபடியே க்ஷேமலாபங்களை பேசினர்.

"பொய்கையாரே! எங்கள் இருவராலே தங்கள் உறக்கமும் கெட்டது. தாங்களுக்கு வீண் சிரமம் கொடுத்து விட்டோம்" என்று பேயாழ்வாரூம் பூதத்தாழ்வாரும் கூறினர். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஸ்வாமி. நாம் மூவரும் ஒன்றாக வேண்டும் என்பது உலகளந்த உத்தமனின் ஆணைப்போலும்" என்றார் பொய்கை ஆழ்வார்.

உண்மையே அது தானே. பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முப்பெரும் ஆழ்வார்களையும் ஒன்று சேர்க்க ஏற்ற இடத்தையும் காலத்தையும் எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு எண்ணியதின் விளைவு தானே இது.

முதலாழ்வார்கள் மூவருமே ஒரே ஆண்டில் ஒரே திங்களில் தொடர்ந்து வந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து பிறந்துள்ளனர். மூவரும் தாய் வயிற்றில் பிறக்காமல் தனித்தனி மலர்களில் திருமாலின் படைகளின் அம்சமாகவே தோன்றினார்கள். இறைவனின் திருவருளால் ஞானாசிரியர் இல்லாமலேயே அனைத்துத் துறை நூல்களையும் கற்றுத் தெளிந்தனர்.

பெருமானையன்றி பெரிய தெய்வம் இல்லையென்று எண்ணி அவனையே அல்லும் பகலும் அயராது வழிப்பட்டு வந்தனர். மாநில மக்கட்கு அவனின் பெருமைகளையே எடுத்துக் கூறினர். மூவெரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே பல்வேறு இடங்களுக்குச் சென்று பரந்தாமன் வீற்றிருக்கும் கோவில்களை கண்டு சேவித்து வந்தனர். ஒரு நாள் முப்பெரும் ஆழ்வார்கள் கனவிலும் தோன்றி "இந்நாளில் திருக்கோவிலூரிலுள்ள த்ரிவிக்ரமனையும் பூங்கோவல் நாச்சியாரையும் கண்டு வழிபடுவீராக" என்று கூறி மறைந்தான் பெருமான்.  வெவ்வேறு இடங்களில் உறங்கிக் கொண்டிருந்த ஆழ்வார்கள் கனவுக்குப் பின் விழித்தெழுந்தனர். இறைவன் திருவருளைக் கண்டு வியந்தனர்.

அம்மூவரும் ஒரே நாளில் திருக்கோவிலூரை வந்தடைந்தனர். பெருமானைக் காண உள்ளே சென்றனர். பெருமானின் திருவருளைக் கண்குளிரக் கண்டனர். அவன் பெருமையை பைந்தமிழ் பாசுரங்களால் பாடி தொகுத்த்தனர். பகல் பொழுது கழிந்து இரவு பொழுது வந்தது. மழையும் சூறைக்காற்றும் ஒன்று சேர தங்க இடம் தேடி மூவரும் ஆசிரமம் வந்து சேர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள பெருமான் பிராட்டியாரின் பெருமைகளை பற்றியும், தீர்த்த மகிமைய்களைப் பற்றியும், திருத்தல வைபவத்தைப் பற்றியும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம் வெண்ணையுண்ட கண்ணன் மூவரும் அறியா வண்ணம் தாயாரோடு அந்த இடைகழியில் வந்து நின்றான். சிறிய ரேழியில் எப்படியோ சிரமப்பட்டு நின்று கொண்டிருக்கும் அம்மூவருக்கும் திடீரென நெருக்கம் அதிகமாயிற்று. எவரோ மத்தியில் புகுந்து நெருக்குவது போல தோன்றிற்று. அந்த உணர்வு மூவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது.

"என்ன ஆச்சர்யம்! திடீரென எதனால் நமக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது?" என்று அவர்கள் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்து கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். எவரும் இல்லை. ஞானக்கண்ணாகிய விளக்கை அவர்கள் மூவரும் ஏற்றி பார்த்த போது உண்மை விளங்கி விட்டது. திருமாலின் திருவிளையாடலை உணர்ந்து மூவரும் அன்புக் கண்ணீர் வடித்தனர். அப்போது அந்த இடத்தில் பேரொளி பிறந்தது. ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியாருடன் அம்மூவருக்கும் ப்ரத்யட்சண்யமானார்.  பரந்தாமனின் திருக்கோலம் கண்டு மூவரும் தனித்தனியே பாமாலை சூட்டி கண்ணில் நீர்மல்க நின்றனர்.

பொழுது புலர்ந்தது. ஆழ்வார்கள் மூவரும் பெண்ணையாற்றில் நீராடி திருமண் தரித்து துளசிமணி மாலைகளும் நவமணிகளும் துலங்க நாராயணனின்  நாமத்தை போற்றிய வண்ணம் பற்பல திருத்தலங்களை தரிசித்த வண்ணம் தங்களுடைய தலயாத்திரையை மேற்கொண்டனர்.

பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்கோவிலூர், திருவெஃகா, திருவேங்கடம்,  திருப்பாற்கடல்,  திருபரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. பாஞ்ச சன்னியம் எனப்படும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்த அவர் பூவுலகம் உய்ய பெருந்தொண்டு ஆற்றினார்.

பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருதஞ்சை மாமணிக்கோயில், திருக்கோவிலூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருவேங்கடம், திருத்தண்கா, திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. எத்தனையோ வழிகளில் பக்தர்களுக்கு பேரின்ப பாதையினை காட்டி பைந்தமிழ் பாசுரங்களைப் பதியச் செய்த பின்பு திருமாலின் திருக்கரம் தாங்கும் சுக்ருதத்தை முன்போல் திரும்பவும் பெற்று பிறவாப் பெருவாழ்வு வாழ்ந்தார். உலகம் முழுவதும் அறிவுச் சுடர் ஏற்றி ப்ரகாசிக்கச் செய்து ஞான ஒளியிலே நானிலம் போற்றும் ஸ்ரீமந்நாராயணனைக் கண்டார்.

பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருவிண்ணகரம், திருக்கச்சி, திருக்கோவிலூர், அஷ்டபுயகரம், திருவேளுக்கை, திருப்பாடகம், திருவெஃகா, திருவல்லிக்கேணி, திருக்கடிகை, திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம்  முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

No comments:

Post a Comment