Saturday 26 May 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 2


தினமும் பால் காய்ச்சி சமர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதியருக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்க திருவுள்ளம் பற்றியது அக்குழந்தை.  எப்போதும் பால் முழுவதையும் அருந்தி விடும் அக்குழந்தை அன்று அந்த பாலை மீதம் வைத்துவிட்டது. நீங்களும் அருந்துங்கள் என்று சொல்வது போல் ஜாடைக் காட்டியது. அதை அருந்தி விட்டு அவர்களும் வீடு திரும்பினர். அந்த பாலின் சக்தியினால் அவர்கள் இருவருக்கும் வியோதிகம் நீங்கி வாலிபம் திரும்பியது. இளமை உணர்வுகள் கரையுடைத்து பொங்கியது. வாழ்க்கையில் இருவரும் இன்புற்றிருந்த சமயம் மனைவி கருவுற்றாள். தெய்வக் குழந்தையின் சக்தியால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு 'கனிக்கண்ணன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஊரார்கள் இது கண்டு அதிசயித்து அந்த தெய்வக் குழந்தையை திருமழிசையார் என்றே வணங்கி பெருமதிப்பும் பக்தியும் கொண்டனர். அந்த தம்பதியர் கனிக்கண்ணனை திருமழிசையார் முன்னிலையில் கொண்டு வந்து விட, அவரது கடாக்ஷத்திலே நல்ல அறிவைப் பெற்று, அவருக்கு சிஷ்யன் ஆகி, பாகவத நிஷ்டனாகி, இருவரும் தோழர்களாக வளர்ந்து வந்தார்கள்.  

திருமழிசையார் ஏழு வயது வரை அவரை வளர்த்தவர்களோடு வாழ்ந்து வந்தார். பின்னர் ஐம்புலன்களையும் அடக்கி அஷ்டாங்க யோகத்தால் முழுமுதற் கடவுளை அடைய விரும்பினார். உலகின் முதற்பொருளை உணர்ந்த பின்னரே யோகத்தில் அமர வேண்டும் என்று எண்ணிய அவர் அதற்குரிய வழியை ஆராய எல்லா சமய நூல்களையும், தத்துவங்களையும் கண்டறிய எண்ணினார். சாக்கியம், சமணம் என்னும் பல நூல்களை கற்றுணர்ந்தார். தெளிவு பிறக்காமல் சைவ நூல்களையும் ஆராய்ந்தார். பல தலங்களுக்குச் சென்று வேதத்தை ஒப்புக்கொள்ளாத பிற சமயங்கள், வேதத்தை ஒப்புக்கொண்டும் அதற்கு அவப்பொருள் கூறும் குத்ருஷ்டி மதங்களான அகச்சமயங்கள் ஆகிய ஒவ்வொரு மதத்திலும் அந்தந்த மதத்திற்கு தக்க ஒழுக்கத்தோடு அவற்றில் ஊன்றி நின்று ஆராய்ந்து பார்த்து, அவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டு அவற்றிலிருந்து விலகி கடைசியில் உலகிற்கு மூலப்பொருளாக நிற்பது சிவம் ஒன்றேயாகும் என்று முடிவு கட்டி யோகங்கள் பலவும் செய்து சித்தராக மாறினார். 

தொண்டை மண்டலத்தில் உள்ள சைவ, வைணவ க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே வந்த திருமழிசையார் திருமயிலையில் உள்ள பேயாழ்வார் அமைத்துள்ள நந்தவனத்தை வந்தடைந்தார்.  அங்கே துளசி செடியின் அருகே நெற்றியில் திருமண் துலங்க துளசி மணி மாலைகளும், தாமிரபரணி மாலைகளும் அணிந்துக் கொண்டு யோகத்தில் ஆழ்ந்து திருத்துழாய்முடியன் ஸ்ரீமந்நாராயண தியானத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீவைஷ்ணவ சீலரான பேயாழ்வாரைக் கண்டார். அவரைக் கண்டதும் திருமழிசையார் மனதில் ஒருவித உணர்ச்சி ஏற்பட்டது. அவரது தேஜசைப் பார்த்து கொண்டிருந்த மாத்திரத்திலேயே அவரை தமது ஞான குருவாக வரித்துக் கொண்டார்.  அப்போது கண்விழித்தார் பேயாழ்வார்.  திருமழிசையார் அவரை வணங்கி, "ஸ்வாமி அடியேன் திருமழிசையார்" என்றார். திருமழிசையார் பெரிய யோகி, தத்துவ மேதை, சைவத்தில் ஆழ்ந்த பற்றுடையவர், பிற மதங்களை கைவிட்டவர் என்றெல்லாம் பலர் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறார் பேயாழ்வார். அவருக்கு உண்மைகளை எடுத்துரைத்து அவரை ஸ்ரீவைஷ்ணவனாக ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபட எண்ணிய பேயாழ்வார் "அப்படியா, அடியேனை பேயன் என்றழைப்பார்கள். உம்மை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தும் உலகம் அனைத்திற்குமான மூலக்காரணமும் பரம்பொருளுமான முழுமுதற்பெருமான் ஸ்ரீமந்நாராயணனைப் பற்றி உணராது போனீரே!" என்று கூறினார். அதன் பிறகு இருவருக்கும் வாதம் ஏற்பட ஆயிரக்கணக்கான வசனங்களையும் நியாயங்களையும் எடுத்து உரைத்து கடைசியில் திருமழிசையாரை வெற்றி கொண்டார் பேயாழ்வார்.  அவரின் கருத்துகளில் மனத்தை பறிக்கொடுத்த திருமழிசையார் வைஷ்ணவத்தை மிகவும் பெருமையோடும் பூறிப்போடும் மனங்குளிர ஏற்றுக்கொண்டார். 

 மனம் திருந்திய அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களோடு மந்த்ரா அர்த்தங்களையும் திருமழிசையார் செவியில் முறைப்படி  உபதேசித்தார் பேயாழ்வார். ஸ்ரீமந்நாராயண மந்த்ரம் செவிகளில் பாய்ந்ததும் திருமழிசையார் பரம விஷ்ணு பக்தரானார். அத்திருமந்த்ர மகிமையால் ஸ்ரீமந்நாராயணனை தன் அகக்கண்களால் கண்டார். சிரத்தின் மீது ஆரம் உயர்த்தி கைதொழுது அநேக தண்டனிட்டு, கண்களில் நீர் மல்க மெய்மறந்து பலவாறாக பாசுரங்களைப் பாடி பெருமானைத் துதித்தார் திருமழிசையார்.  அதைக் கண்டு பேரானாந்தம் அடைந்த பேயாழ்வார் எம்பெருமானை சிந்தையிற்கொண்டு யோக நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். திருமழிசையாரும் அவரை வணங்கி விடைப் பெற்று திருமழிசைக்கு வந்து யோக நிலையில் நின்று திருமகள் கேள்வனை தியானித்துக் கொண்டிருந்தார். சுதர்சனத்தின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீவைஷ்ணவ பக்தரான அவர், சக்கரம் போன்று சுழன்று சுழன்று பல மதங்களில் உருண்டும் கிடந்தும் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் திருவடிக்கமலம் கிடப்பதே மெய்யான பொருள் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டார். அவருக்கு கருடாழ்வார் மீது பரந்தாமன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சேவை சாதித்தார்.

Friday 25 May 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1


மகிசாரக்ஷேத்ரம் என்னும் பெயருடைய திருத்தலம் திருமழிசையாகும். இறைவளமும் இசைவளமும் ஒருங்கே நிரம்பப்பெற்ற திருத்தலம் திருமழிசையாகும்.  திருமழிசை கோவிலில் எப்போதும் வேதம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தணர்கள் அக்கோவிலைச் சுற்றி குடியிருந்தனர். அத்திருத்தலத்தின் தபோவனத்தில் முனிவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் பார்கவ முனிவரும் அவரது மனைவி கனகாங்கியும் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற கவலையும் இருந்தது.  இருவரும் இல்லத்தில் இருந்துக் கொண்டே வானப்ரஸ்தத்தை அடைவதற்கான வழிகளை கடைப்பிடித்தனர். அப்போது பார்கவ முனிவரும் மற்ற முனிவர்களோடு சேர்ந்து தீர்க்கசத்திர யாகம் நடத்தி வந்தார். அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள்.  ஆனால் அவரது மனைவிக்கோ பத்து மாதமாகியும் குழந்தையும் பிறக்கவில்லை வலியும் எடுக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்ற அவர்களை எம்பெருமான் சோதிக்க நினைத்தார்.

 
சித்தார்த்தி ஆண்டு தை மாதம் கிருஷ்ணபட்சம் ப்ரதமை திதி ஞாயிற்றுக்கிழமை மகம் நக்ஷத்திரத்தில் திருமாலின் திருக்கரங்களிலே ஒளிவிடும் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக கனகாங்கி வயிற்றில் இருந்து அங்கங்களே இல்லாத ஒரு ஜீவன் பிறந்தது. பிள்ளைக்காக ஏங்கி தவித்த எங்களுக்கு இப்படி உருவமே இல்லாத பிள்ளை பிறந்ததே நாங்கள் என்ன தவறு செய்தோம். யாகம் செய்தும் பலனில்லையே என எண்ணிக் கலங்கினர். இனி துன்பப்பட்டு ப்ரயோஜனம் இல்லை குழந்தை பாசத்தில் உழன்றால் பகவத் கைங்கர்யத்திற்கு தடை ஏற்படும் என்பதற்காக தான் பரமன் இப்படி ஒரு ஜீவனை கொடுத்தார் என்று நினைத்த வண்ணம் அப்பிண்டத்தை கையிலேந்திக் கொண்டு ஊருக்கு வெளியில் உள்ள பிரம்பு புதருக்கு அருகில் சென்றனர்.  கொண்டு வந்த பிண்டத்தை பார்த்து கலங்கினர். இனி வருந்த கூடாது என்றெண்ணி கொண்டு வந்த தூய மெல்லிய ஆடையை மெத்தென்று மடித்து புதரின் கீழ் வைத்து அதன் மேல் அப்பிண்டக் குழந்தையை வைத்தார். அதை விட்டு பிரிய மனமின்றி அதையே சிறுது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தனர். எத்தனை நேரம் பார்த்தாலும் இந்த பிண்டம் குழந்தையாக போவதில்லை என்று நினைத்துக் கொண்டே மனைவியை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முனிவர்.

அப்போது திருமால் பிராட்டியாருடன் பிரம்பு புதரில் எழுந்தருளி உறுப்புகள் இல்லாத ஜீவன் திருக்கண் மலர அனுக்கிரகம் செய்தார்.  பிராட்டியாரும் அருள் பாலித்தார்.  திருமால் கடாட்சமும் திருமகள் கடாட்சமும் பெற்ற அந்த ஜீவன் தங்கம் என ஜொலித்தது. பேரொளி பொங்கும் திருவருட்செல்வமாக கை-கால்களை அசைத்து குவா-குவா என்று கேட்பவர்கள் நெஞ்சம் துடிக்கும் அளவுக்கு அழுதது. பிரம்பைக் கொண்டு பல தொழில் செய்து பிழைக்கும் திருவாளன் என்பவன் அந்த சமயம் அங்கு வந்தான்.  பிரம்பறுக்க வந்தவன் பேரொளி பொங்கும் அந்த குழந்தையை கண்டான். அது தெய்வக் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று நினைத்தான். தனக்கு பிள்ளையில்லா குறை தீர்க்க ஆண்டவனே அக்குழந்தையை கொடுத்திருக்கிறான் என்றெண்ணிய படி அக்குழந்தையை வெள்ளாடையோடு எடுத்துக்கொண்டதும் அக்குழந்தை அழுகையை நிறுத்தியது.

தனக்கு கிடைத்த பொக்கிஷம் என நினைத்து அக்குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்தான். தாயன்போடு வாங்கி உச்சி மோர்ந்து முத்தமிட்டாள்.  மறுகணமே தாயன்பு மிகுதியால் அவளுக்கு மார்பில் பால் சுரந்துவிட்டது. அந்த குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி பாலை குடுக்க தொடங்கிய போது அக்குழந்தை பாலை குடிக்க மறுத்து விட்டது.  தாய்ப்பாலையோ தண்ணீரையோ பழத்தையோ உண்ணாமல் சொர்ணவிக்ரஹம் போல் சயனித்து இருந்தது. அக்குழந்தையின் இந்த செயல் புரியாத அவர்கள் கடவுளை பிரார்த்தித்தனர். அதிசயமான அந்த குழந்தையை பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அதை பார்க்க வருகை தந்தநர்.அக்குழந்தையால் திருமழிசைக்கே ஒரு பொற்காலம் வந்தது போல் நினைத்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அக்குழந்தையை பார்க்க ஒரு வயதானவர் தன் மனைவியோடு வந்தார். இருவருமே திருமால் அடிமைகள். பல ஆண்டுகளாகியும் குழந்தை செல்வம் இல்லாத குறையோடு இருந்தனர். இந்த அதிசய குழந்தையை பற்றி கேள்விப்பட்டு அதை பார்க்க வந்தனர். அதற்கு கொடுப்பதற்காக மதுரமான பால் கொண்டு வந்திருந்தனர். அதை பார்த்த பங்கஜவல்லி 'ஐயா! இக்குழந்தை இதுவரை எதையும் உண்டதில்லை" என்று சொன்னாள். ஆனால் அவர்களோ வெள்ளிக்கிண்ணத்தில் பாலை எடுத்து "திருமாலின் திருஅவதரமாக திருமழிசையில் அவதரித்துள்ள அருட்செல்வமே எங்கள் மனக்குறை நீங்க பாலை பருகி மகிழ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு பாலை புகட்டவும் குழந்தை புன்முறுவல் பூத்த வண்ணம் பாலை பருகிவிட்டது. அதை கண்டு அனைவரும் ஆச்சர்யமுற்றனர். "என்ன தவப்பயனோ தாங்கள் கொடுத்த பாலை பருகி விட்டது இக்குழந்தை. தாங்கள் எங்கள் மீது கருணைக் கொண்டு நாள்தோறும் வந்து பால் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்றனர் திருவாளனும் பங்கஜவல்லியும். அதன்படியே தினமும் வந்து பால் புகட்டிச் சென்றனர் தம்பதியர்.

Sunday 20 May 2012

முதலாழ்வார்கள் வைபவம்


மூன்று ஆழ்வாரும் திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்து விட்டு ஒரு ஆசிரமம் நோக்கி விரைந்தார்கள் என்பதை பார்த்தோம்.  ஆசிரமத்திற்குள் கண் அயர்ந்தார் பொய்கை ஆழ்வார். அப்போது படபடவென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் கண்களை சுற்றும் நிலையில் இருந்த அவர் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். 

கொட்டும் மழையில் நனைந்தபடி அடியார் போல யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்."ஸ்வாமி! இந்த கும்மிருட்டில் இப்படி கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு இக்குடிசைக்கு வந்துள்ள அடியார் தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்று கேட்டார் பொய்கை ஆழ்வார். "இந்த எளியவனை உள்ளே ஏற்று கொள்வீரோ?" என்று அவர் பணிவோடு கேட்டார். "தாராளமாக வாருங்கள். இந்த உள்நடையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்.. தேவரீர் தாங்கள் உள்ளே வந்து எம்மோடு அமருங்கள்.""அடியேன் பூதத்தான்" என்று உள்ளே வந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் "அடியேன் பொய்கையான்" என்று இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.ஆழ்வார்  இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டதும் பேரானந்தம் அடைந்தனர்.   

பரந்தாமனின் லீலா வினோதங்களில் லயித்துப் போய் நெடுநேரம் பேசிக் கொண்டே இருந்தனர்.  நள்ளிரவு ஆகியும் இருவரும் தூங்கவில்லை. எம்பெருமானின் சுகானுபவத்தில், பேச்சில் திளைத்துக் கொண்டிருந்தபோது திடீரென யாரோ ஆசிரமத்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. பொய்கை ஆழ்வார் கதவை திறந்து எட்டி பார்த்தபோது அடியவர் ஒருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பதைக் கண்டார்.

 "தாங்கள் அடியவர் போலிருக்கிறீர். யாரென்று அறிந்துக் கொள்ளலாமா" என்றார் பொய்கை ஆழ்வார். "அடியேன் பெயர் பேயன். உமது ஆசிரமத்தில் எமக்கு இந்த இரவு மட்டும் தங்க இடம் தரவேண்டும்." "அதற்கென்ன உள்ளே வாருங்கள். நான் பொய்கையன், உள்ளே பூதத்தார் இருக்கிறார். இக்குடிலின் ரேழியில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம். வாருங்கள் உள்ளே" என்று கூறி பேயாழ்வாரை உள்ளே அழைத்துச் சென்றார் பொய்கை ஆழ்வார்.  சிறிய இடம் காரணமாக மூவரும் எழுந்து நின்றபடியே க்ஷேமலாபங்களை பேசினர்.

"பொய்கையாரே! எங்கள் இருவராலே தங்கள் உறக்கமும் கெட்டது. தாங்களுக்கு வீண் சிரமம் கொடுத்து விட்டோம்" என்று பேயாழ்வாரூம் பூதத்தாழ்வாரும் கூறினர். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஸ்வாமி. நாம் மூவரும் ஒன்றாக வேண்டும் என்பது உலகளந்த உத்தமனின் ஆணைப்போலும்" என்றார் பொய்கை ஆழ்வார்.

உண்மையே அது தானே. பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் என்னும் முப்பெரும் ஆழ்வார்களையும் ஒன்று சேர்க்க ஏற்ற இடத்தையும் காலத்தையும் எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு எண்ணியதின் விளைவு தானே இது.

முதலாழ்வார்கள் மூவருமே ஒரே ஆண்டில் ஒரே திங்களில் தொடர்ந்து வந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து பிறந்துள்ளனர். மூவரும் தாய் வயிற்றில் பிறக்காமல் தனித்தனி மலர்களில் திருமாலின் படைகளின் அம்சமாகவே தோன்றினார்கள். இறைவனின் திருவருளால் ஞானாசிரியர் இல்லாமலேயே அனைத்துத் துறை நூல்களையும் கற்றுத் தெளிந்தனர்.

பெருமானையன்றி பெரிய தெய்வம் இல்லையென்று எண்ணி அவனையே அல்லும் பகலும் அயராது வழிப்பட்டு வந்தனர். மாநில மக்கட்கு அவனின் பெருமைகளையே எடுத்துக் கூறினர். மூவெரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே பல்வேறு இடங்களுக்குச் சென்று பரந்தாமன் வீற்றிருக்கும் கோவில்களை கண்டு சேவித்து வந்தனர். ஒரு நாள் முப்பெரும் ஆழ்வார்கள் கனவிலும் தோன்றி "இந்நாளில் திருக்கோவிலூரிலுள்ள த்ரிவிக்ரமனையும் பூங்கோவல் நாச்சியாரையும் கண்டு வழிபடுவீராக" என்று கூறி மறைந்தான் பெருமான்.  வெவ்வேறு இடங்களில் உறங்கிக் கொண்டிருந்த ஆழ்வார்கள் கனவுக்குப் பின் விழித்தெழுந்தனர். இறைவன் திருவருளைக் கண்டு வியந்தனர்.

அம்மூவரும் ஒரே நாளில் திருக்கோவிலூரை வந்தடைந்தனர். பெருமானைக் காண உள்ளே சென்றனர். பெருமானின் திருவருளைக் கண்குளிரக் கண்டனர். அவன் பெருமையை பைந்தமிழ் பாசுரங்களால் பாடி தொகுத்த்தனர். பகல் பொழுது கழிந்து இரவு பொழுது வந்தது. மழையும் சூறைக்காற்றும் ஒன்று சேர தங்க இடம் தேடி மூவரும் ஆசிரமம் வந்து சேர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள பெருமான் பிராட்டியாரின் பெருமைகளை பற்றியும், தீர்த்த மகிமைய்களைப் பற்றியும், திருத்தல வைபவத்தைப் பற்றியும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம் வெண்ணையுண்ட கண்ணன் மூவரும் அறியா வண்ணம் தாயாரோடு அந்த இடைகழியில் வந்து நின்றான். சிறிய ரேழியில் எப்படியோ சிரமப்பட்டு நின்று கொண்டிருக்கும் அம்மூவருக்கும் திடீரென நெருக்கம் அதிகமாயிற்று. எவரோ மத்தியில் புகுந்து நெருக்குவது போல தோன்றிற்று. அந்த உணர்வு மூவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது.

"என்ன ஆச்சர்யம்! திடீரென எதனால் நமக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது?" என்று அவர்கள் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்து கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். எவரும் இல்லை. ஞானக்கண்ணாகிய விளக்கை அவர்கள் மூவரும் ஏற்றி பார்த்த போது உண்மை விளங்கி விட்டது. திருமாலின் திருவிளையாடலை உணர்ந்து மூவரும் அன்புக் கண்ணீர் வடித்தனர். அப்போது அந்த இடத்தில் பேரொளி பிறந்தது. ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியாருடன் அம்மூவருக்கும் ப்ரத்யட்சண்யமானார்.  பரந்தாமனின் திருக்கோலம் கண்டு மூவரும் தனித்தனியே பாமாலை சூட்டி கண்ணில் நீர்மல்க நின்றனர்.

பொழுது புலர்ந்தது. ஆழ்வார்கள் மூவரும் பெண்ணையாற்றில் நீராடி திருமண் தரித்து துளசிமணி மாலைகளும் நவமணிகளும் துலங்க நாராயணனின்  நாமத்தை போற்றிய வண்ணம் பற்பல திருத்தலங்களை தரிசித்த வண்ணம் தங்களுடைய தலயாத்திரையை மேற்கொண்டனர்.

பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்கோவிலூர், திருவெஃகா, திருவேங்கடம்,  திருப்பாற்கடல்,  திருபரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. பாஞ்ச சன்னியம் எனப்படும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்த அவர் பூவுலகம் உய்ய பெருந்தொண்டு ஆற்றினார்.

பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருதஞ்சை மாமணிக்கோயில், திருக்கோவிலூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருவேங்கடம், திருத்தண்கா, திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. எத்தனையோ வழிகளில் பக்தர்களுக்கு பேரின்ப பாதையினை காட்டி பைந்தமிழ் பாசுரங்களைப் பதியச் செய்த பின்பு திருமாலின் திருக்கரம் தாங்கும் சுக்ருதத்தை முன்போல் திரும்பவும் பெற்று பிறவாப் பெருவாழ்வு வாழ்ந்தார். உலகம் முழுவதும் அறிவுச் சுடர் ஏற்றி ப்ரகாசிக்கச் செய்து ஞான ஒளியிலே நானிலம் போற்றும் ஸ்ரீமந்நாராயணனைக் கண்டார்.

பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருவிண்ணகரம், திருக்கச்சி, திருக்கோவிலூர், அஷ்டபுயகரம், திருவேளுக்கை, திருப்பாடகம், திருவெஃகா, திருவல்லிக்கேணி, திருக்கடிகை, திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம்  முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்


                                                                பேயாழ்வார்

திருமயிலையில் வைஷ்ணவக் கோயில்கள் பல இருந்தாலும் ஸ்ரீ ஆதிக்கேசவ பெருமாள் கோவில் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த கோவிலின் அருகில் திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டு இருந்தது. அந்த கிணற்றின் தண்ணீர் தேங்கிய நீர் போல மிகச் சுவையை பெற்றிருந்தது. அந்த கிணற்றின் அமைப்பும் தண்ணீரின் சுவையும் அனைவரையும் இன்பத்தில் மூழ்க வைத்தது. அதில் எப்போதும் தண்ணீர் மேல் மட்டம் வரைக்கும் வற்றாமல் சிறப்பு தன்மையோடு இருந்தது. அப்படி தெய்வீகத்  தன்மையுடைய அந்த கிணற்றில் அதுவரைக்கும் யாருமே பார்த்திராத வண்ணம் புதுமையான பூவொன்று பூத்தது. அதை செவ்வல்லி என்று அழைப்பார்கள்.

சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறை தசமி திதி, வியாழக்கிழமை சதய நக்ஷத்திரத்தில் கண்ணன் தாங்கிய ஐந்து படைகளில் ஒன்றான நரந்தகம் என்னும் வாளின் அம்சமாக செவ்வல்லி மலரில் தேஜசோடு கூடிய தெய்வக் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த அடுத்த க்ஷணமே புன்முறுவல் பூத்த அந்த குழந்தையை சுற்றி பேரொளி பொங்கியது. குருகுலத்தில் சேர்ப்பதற்கு முன்னமே கொஞ்சும் தமிழ் அதன் நாக்கினில் பிறள ஆரம்பித்தது. நெகிழ வைக்கும் தமிழ் பாசுரங்களை நினைத்த நேரத்தில் பாடி வியக்க வைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணனுமாய் எம்பெருமான் நாமத்தை ஜபிக்க தொடங்கியது. எந்த பருவத்திலும் எம்பெருமானை பற்றிய பிதற்றலைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் இப்படி பித்தனாக வாழ்கிறானே என்று அவரை பேயன் என்று அழைத்தனர் பக்தர்கள். அடியார்களும் பக்தர்களும் அவரை பேயாழ்வார் என்று போற்றிக் கொண்டாடினர்.

கண்ணனின் வாளின் கூறாகப் பிறந்ததால் கூரிய அறிவுடையவராக திகழ்ந்தார். நீதி நூல்கள், அறநூல்கள், மதநூல்கள், பொதுவான நூல்கள் அனைத்தையும் எம்பெருமானாகிய ஆசானைக் கொண்டே முழுமையாகக் கற்று பெரும் அறிவோடு திகழ்ந்தார். நிறைக்குடமாக விளங்கிய பேயாழ்வார் எம்பெருமானின் அவதாரத்தைப் பற்றியும் அவர் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் நினைத்து நினைத்து பூரிப்படைந்தார். அல்லிக் கிணற்றில் பூத்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அனந்தனின் திருவடியில் சேர்த்து "நாராயணா நாராயணா" என்று நாள்பொழுதும் அவன் பெருமைகளை பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார்.

பேயாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடி பரமனையே நேரில் கண்டது போல் பெருமிதம் அடைந்தனர்.  பேயாழ்வார் தொண்டை மண்டலத்து க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் சென்று பரந்தாமனை சேவிக்க பெரும் ஆவல் கொண்டார். தமது யாத்திரையை தொடங்கி வைஷ்ணவ பதிகளைச் சென்றடைந்து பாசுரங்களால் பரமனை போற்றி பணிந்தார். இறுதியாக பெருமாள் விருப்பப்படியே திருக்கோவிலூருக்கு வந்தடைந்தார். திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்துக் களித்த நேரம் இரவாகிப் போன போது மழையும் புயலும் சேர்ந்து கொண்டது.  எங்கேயாவது அந்த இரவுப் பொழுதில் தங்கி களைப்புற விரும்பிய அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  அங்கே அருகில் முனிவர் ஆசிரமம் ஒன்று இருக்க கண்டு அங்கே போய் பூட்டி இருந்த கதவை தட்டினார்.

நிற்க: முதலாழ்வார்கள் மூவரின் சரித்திரத்தை தனித்தனியே பார்த்தோம். மூவரும் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ஆசிரமம் நோக்கி வந்த வரையில் பகிர்ந்து கொண்டோம். இனி மூவரும் சேர்ந்து என்னென்ன கைங்கர்யங்கள் புரிந்தனர் என்பதை பகிர்ந்து கொள்வோம்.

Friday 18 May 2012

முதலாழ்வார்கள் வைபவம் - பூதத்தாழ்வார்

                                                             பூதத்தாழ்வார்: 

கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும் இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடு போல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள் நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.

இந்த மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்ட நக்ஷத்திர நாளில் திருமாலின் அம்சமான கதாயுதமே குழந்தையாக பிறந்தது.

ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்த குழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர்.

அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும் அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும் கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர். முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல்  மண்ணுயிரைப் பேணிக் காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.

அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.

'நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.

கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ் பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு தொண்டை மண்டலத்திலுள்ள மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சுற்றிருக்கும் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு தொடர்ந்து சென்று எம்பெருமானை தரிசித்து வந்தார். உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின் ப்ரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி அவருக்கு கனவில் உரைத்தார். திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு திருக்கோவிலூர் சென்றார் அவர். அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு, இரவு தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு ஆசிரமம் தென்படவே அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்.  

நிற்க இந்த இடத்தில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.

Wednesday 16 May 2012

முதலாழ்வார்கள் வைபவம் - பொய்கை ஆழ்வார்

முதலாழ்வார்கள் வைபவத்தில் முதலில் நாம் ஒவ்வொருவருடைய வரலாற்றை தனித்தனியாக பகிர்ந்து கொண்டு பிறகு அவர்கள் மூவரும் எங்கே எப்படி ஒன்றக சேர்கிறார்கள் எங்கு சென்றார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம். முதலில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.
                                                       
                                                                பொய்கை ஆழ்வார்:

பிரம்ம தேவன் நாராயணனை யாகம் செய்து பூஜித்த பெருமை மிக்க நகரமும், சோழ பல்லவ மன்னர்களுக்கு தலைநகரமாக அனைத்து இயற்கை வளங்களோடும் செழிப்புற்று விளங்கிய தெய்வதிருநகருமான காஞ்சிபுரத்தில், தாமரை பொய்கைகளும் குளிர்ந்த சிற்றோடைகளும் செந்தாமரை, வெண்தாமரை, கெருங்குவளை, நீலோர்பவம் போன்ற தேன் சுரக்கும் மலர்களுடன் திருவெஃகா திருக்கோவிலின் சந்நிதி பார்ப்போரை வசீகரிக்கும் தன்மை உடையது.

அன்னங்கள் நீந்தி விளையாடும் அழகிய பொய்கைகளில் விண்ணவரும் கந்தர்வரும் நீந்தி களிப்பதும் தேவலோக அப்ஸர மாதர்கள் ஜலக்ரீடை புரிவதும் தெய்வாம்ச புகலிடமாக விளங்குகிறது.

எழில் கொஞ்சும் அந்த தாமரை பொய்கையின் நடுவே மடலவிழ்ந்த ஒரு மனோகரத் தாமரையில் ஸ்ரீமந்நாராயணன் திருக்கண் மலர்ந்தார்.  அப்பெருமானின் திருக்கரங்களில் சுடர் வீசும் பாஞ்சஸந்யம் எனப்படும் திருச்சங்கின் அம்சம் அப்போது ஒரு தெய்வக் குழந்தையாக அவதரித்தது.

ஸித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் வளர்பிறையாம் அஷ்டமி திதி செவ்வாய்க்கிழமை திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்த அந்த தெய்வ குழந்தையின் அதிமதுரக்குரல் கேட்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இன்னிசை பண்ணிசைத்து மகிழ்ந்தனர்.

பொய்கையில் பிறந்ததால் பொய்கையார் என்று திருநாமம் சூட்டினர்.  திருமாலின் சேனைத்லைவன் திருமாலை வழிபடுவதற்குரிய திருவெட்டெழுத்தை முறையோடு அக்குழந்தையின் காதில் ஓதினார். அதனை வைணவர்கள் திரு இலச்சனைப் பெறுதல் என்பார்கள்.

பிறப்பிலேயே திருவெலாம் பெற்று வந்த பொய்கையார் கோகுலத்தில் கண்ணன் வளர்ந்தது போல திருவெஃகாவில் வளர்ந்து வந்தார்.

நடைபயிலும் பருவத்திலேயே அருந்தமிழ்கலையும் வேதபுராணங்களும் கற்றுணர்ந்தார். இருமைக்கும் துணை புரிவது திருமாலுக்குச் செய்யும் திருத்தொண்டு ஒன்றேயாகும் என்பதை நிலையாக நெஞ்சில் பதித்துக் கொண்டார்.அல்லும் பகலும் திருமாலின் அடிமலர் புகழ்ப் பாடிவரும் ஸ்ரீவைஷ்ணவ பக்தர்கள் இவரை பொய்கை ஆழ்வார் என்றே போற்றி பணிந்தனர். பொய்கை ஆழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து பரமனையே கண்டது போல பெருமிதம் அடைந்தனர்.

காஞ்சியில் 18 வைஷ்ணவ ஷேத்திரங்களிலும் மங்களாஸாஸனம் செய்து எம்பெருமானை போற்றினார் பொய்கை ஆழ்வார். அதன் பின்னர் பொய்கை ஆழ்வார் தொண்டை மண்டலத்திலுள்ள திவ்ய ஷேத்திரங்களை தரிசிக்க திருவுள்ளம் கொண்டு பாதயாத்திரை புறப்பட்டார். பற்பல ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே திருக்கோவிலூரை அடைந்தார். அக்கோவிலில்  உள்ள உலகளந்த பெருமானை தரிசிக்க திருவுள்ளம் கொண்டார். அவர் செல்லும் வழியே தென்பெண்ணை ஆறு குறுக்கிட்டது. அதை கண்டதும் விரசை என்னும் பாலாறும் ஸ்ரீமந்நாராயணன் திருத்தோற்றமும் நினைவுக்கு வந்தது. அந்த கணமே பச்சை வண்ண மேனியையும் அவன் கார் குழலையும் கண்டார் பொய்கை ஆழ்வார். அந்த ஒளி பொருந்திய முகத்தில் கருணை மழை பொழியக் கண்டார். அங்கே திருமகளையும் கண்டார். கண்டதும் அவர் கண்கள் ஆனந்த குளமாகியது. அவரை பாடி பாடி பரவசமானார். பரமனை பாடி மகிழ்ந்து மெய்மறந்து நின்றிருந்தபோது இரவாகி போனது நினைவுக்கு வந்து சுய உணர்வு கொண்டு பார்த்த பொய்கை ஆழ்வார் என்ன செய்வது என்று யோசிக்கையில் சூறைக்காற்றும் மழையும் சூழ்ந்து கொண்டது.

அப்போது அவரது கண்ணில் ஒரு ஆசிரமம் கண்ணில் பட்டது.  மனதில் ஆர்வம்  எழும்ப அதை நோக்கி வேகமாக நடந்தார். மிருகண்டு முனிவர் அமைத்திருந்த ஆசிரமம் அது. அங்கே பொய்கையாழ்வார் சென்ற போது கதவு திறந்தே இருந்தது. யாரும் உள்ளே இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. பொய்கையிழ்வார் மெதுவாக உள்ளே சென்றார்.
நடு இரவு...வெளியில் கொட்டும் மழை... இனி போவதற்கு வழியில்லை.....இங்கே ஓரிடத்தில் சாய்ந்து துயில் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கதவை தாழிட்டுக் கொண்டு வந்து, சோர்வு யாவும் நீங்க நெட்டி முறித்து காலை நீட்டிக் கொண்டு பரந்தாமா என்று கூறியபடியே படுத்து சற்று கண் அயர்ந்தார்.

நிற்க இந்த இடத்தில் இரண்டாம் ஆழ்வாரான பூதத்தாழ்வரைப் பற்றி சிறிது பகிர்ந்து கொள்ளலாம்.

Tuesday 15 May 2012

முதலாழ்வார்கள்-3.பேயாழ்வார்-ஒரு சிறிய குறிப்பு

ஐப்பசி சதயத்தில் திருமயிலையில் ஓர் கிணற்றில் செங்கழுநீர் (செவ்வல்லி) பூவிலிருந்து நந்தகமென்னும் வாளின் அம்ஸமாய் அவதரித்த பெரியவரான பேயாழ்வாரை வணங்குகிறேன்.

பொய்கை, பூதத்தாழ்வார்கள் அவதரித்த அந்த ஸித்தார்த்தி ஐப்பசி மாதத்தில் பூதத்தாழ்வார் அவதரித்த மறுதினம் சதய நக்ஷத்திரத்தில் மயிலையில் செங்கழுநீர் (செவ்வல்லி) நடுவிலிருந்து அவதரித்தவரும், பக்தியினாலே பெரியவரும், ஸாத்ய பக்தியே வடிவெடுத்தவரும், ஸ்ரீநந்தகம் என்னும் வாளின் அம்ஸமானவருமான பேயாழ்வாரை வணங்குகிறேன்.

மயிலை நகருக்குத்  தலைவராய், கிணற்றிலே செவ்வல்லி பூவிலே அவதரித்தவராய், திருவோடு கூடிய நாராயணனைக் கண்டு களித்தவரான பேயாழ்வாரை சரணடைகிறேன்.

தாமரை கேள்வனுடைய திருவடித் தாமரைகளில் பெருங்காதலால் உண்டான சிறந்த மயக்கத்தால் பேய்போலே திரிந்தமையால் பேயாழ்வார் என்று எங்கும் புகழ் பெற்ற குணக்கடலான பேயாழ்வாரை வணங்குகிறேன்.


முதலாழ்வார்கள்-2.பூதத்தாழ்வார்-ஒரு சிறிய குறிப்பு

ஐப்பசி அவிட்டத்தில் திருக்கடல்மல்லை கடற்கரையில் மலர்ந்த நீலோத்பலத்தில் கதையின் அம்ஸமாய் அவதரித்த பூதத்தாழ்வாரை துதிக்கிறேன்.

எவரொருவர் பரமபுருஷனுக்கு ஞானச் சுடர் விளக்கை ஏற்றினாரோ, கடல்மல்லையின் தலைவராய் குருக்கத்திப் பூவில் அவதரித்தருளினவரான அந்த பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீய:பதியின் கருணையால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவராய், சிறந்த கல்யாண  குணங்களையுடையவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்.

ஸ்ரீமந்நாராயணனின் கௌமோதகி என்னும் கதாயுதத்திண் ஸக்தி ஸ்வரூபியான பூதத்தாழ்வார் என்னும் முனிவர் தலைவர் இவ்வுலகில் கிழக்கு கடற்கரையிலே, திருக்கடல்மல்லை என்னும் நகரில் பூப்பந்தலினுள் (நீலோபலத்தினுள் என்று பாடாந்தரம்) அதே ஸித்தார்த்தி வருடத்தில், அதே ஐப்பசி மாதத்தில் பொய்கை ஆழ்வார் அவதரித்த  மறுதினத்தில் அவதரித்தருளினார்.


முதலாழ்வார்கள்-1.பொய்கை ஆழ்வார்-ஒரு சிறிய குறிப்பு

துவாபரயுகத்தில் காஞ்சியில் திருவெஃகாவில் பொய்கையில் பொற்றாமறையிலிருந்து ஐப்பசி திருவோணத்தில் பாஞ்சஜந்யம் என்னும் சங்கத்தின் அம்ஸமாக அவதரித்த பொய்கை ஆழ்வாரை ஆஸ்ரயிக்கிறேன்.

காஞ்சியில் பொய்கையொன்றில் பொற்றாமறையில் பிறந்தவராய், ஸ்ரீமந்நாராயாணனுக்கு வெய்யசுடரோனை  விளக்காக ஏற்றியவரான பொய்கை ஆழ்வாரை தியானிக்கிறேன்

முகுந்தனின் முகமலர்த்தியடியாக உண்டான பாசுரங்களைப் பாடி மயங்கி நிற்பவரூம், ஆழ்வார்களில் முதல்வரும், முக்திக்கு முக்திக்கு மூலமாய் பொய்கை ஆழ்வாரை உபாஸிக்கிறோம். 

பொய்கை ஆழ்வார், துவாபரம் என்ற யுகத்தில், "ஆஜ்ஞாதீ "ஸ்ரீ சந்தந என்னும்"  அக்ஷரங்களால்  கடபயாதி ஸங்க்யைப் படி கிடைத்த 862900 வருடம் சென்றபின் ஸித்தார்த்தி என்கிற வருடம் ஐப்பசி மாதத்தில் ஸுக்லபக்ஷத்தில் அஷ்டமி திதியில் செவ்வாய் கிழமையில், விஷ்ணுவினுடைய மங்களமான திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்தருளினார்.
 
பரமபுருஷனுடைய பாஞ்சஜன்யமென்னும் திருச்சங்காழ்வான், எல்லா உயிர்களையும் ரக்ஷிப்பதற்காக ஐப்பசி மாதத்தில் விஷ்ணுவினுடைய திருவொண நாளில் பொற்றாமறை மலரின் நடுவிலிருந்து பொய்கை ஆழ்வாராக அவதரித்தருளினார். பொய்கையார் என்கிற பெயர் சங்க இலக்கியங்களான புறநானூறிலும் நற்றிணையிலும்   சில பாடல்களைப் பாடியதாக திணைத் துறைக் குறிப்புக்களில் இருந்து தெரிகிறது. போரில் அகப்பட்ட சேர அரசனை விடுவிப்பதற்காக சோழன் கோச்செங்கணானைப்  புகழ்ந்து பாடும் 'களவழி நாற்பது' என்கிற நூலைப் பாடியவர் பொய்கையார் என்பர். சங்ககாலப் பொய்கையாரும், களவழி நாற்பது பொய்கையாரும் பொய்கையாழ்வாரும்  ஒருவரல்லர் என்பது பரவலான கருத்து. காரணம், பொய்கையார் பாடல்கள் சிலவற்றில் ''தோள் அவனையல்லால் தொழா'' (என் தோள்கள் அவனை மட்டுமே வணங்கும்)  ''நயவேன் பிறர் பொருளை நண்ணேன்'' (திருமாலையல்லாது வேறு எவரையும் பாடமாட்டேன்) என்று சொல்கிறார்.

சங்கப் பாடல்களைப் பாடிய பொய்கையாரும் பொய்கையாழ்வாரும் ஒருவரல்ல என்பதுதான் பரவலான கருத்து  . (ராகவையங்கார் இதனுடன் மாறுபடுகிறார்).

 

பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு


வியூக நிலையில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும்  எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன்  பாவ புண்யங்களால் ப்ரபஞ்சத்தில் ப்ரஜைகள் யாவரும்  இப்பிறவிக்  கடலில் தத்தளிப்பதைப் பார்த்து அந்தரங்கத்து மனோ முடிவுகளை அப்போதே மலர்ந்தருள எண்ணினார். திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது புஜங்க சயனமாக தர்மத்தின் தேவனாகிய எமதர்மனின் செயல்பாட்டினை  கவனித்திடுவது போன்ற நிலையில் தென்திசை நோக்கியபடி திருக்கண் மலர்ந்து கடாக்ஷித்தார் ஸ்ரீமந்நாராயணன். "உங்களது பன்னிரு அம்சங்களும் லோகத்தை உத்தாரணம் செய்திட பூவுலகில் பல்வேறு வர்ணங்களில் ஜனனம் கொள்ளட்டும்.  எமது திருவடியை எப்போதும் சேவித்து சிந்தித்து வாழும் உங்களை ஆழ்வார்கள் என்று யாவரும் அழைப்பர். எம்முடைய சர்வமங்கள கல்யாண குண விசேஷங்களை அருந்தமிழ் தேனால் திருமஞ்சனம் செய்வீராக. வேதத்தின் சாரத்தையெல்லாம் பக்தர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் அமுதத்தமிழில் படைபீராக. நீங்கள் போற்றிய பாமாலை யாவும் "திவ்ய ப்ரபந்தம்" என்று மூவுலகம் போற்றும்".


மண்ணுலகில் அவதரிக்க போகும் ஆழ்வாராதிகள் ஸ்ரீமந்நாராயணன் திருவுள்ளம் கேட்டு பேரானந்தம் கொண்டனர். ஆழ்வார்கள் வைஷ்ணவத்திற்கு ஒளிவிளக்காக பிரகாசிகின்ற பரமபதம் தந்த பகவதோதமர்கள் ஆவர். கலியுகத்தின் பாவத்தை அழிக்கும் உலக சூரியனாக பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் பரந்தாமன் நீளாதேவி, பஞ்சாயுதங்கள், ஸ்ரீவத்ஸம், கெனன், துபம், வானமாலாதி சினைங்களையும் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் முதலானோரையும் பன்னிரு ஆழ்வார்களாக ஆவதரிக்கும் படி கூறிய நிமித்தம் வைஷ்ணவம் தழைத்து ஓங்க திவ்ய ப்ரபந்தம் என்னும் அமுத பாசுரங்கள் நமது நெஞ்சங்களில் எல்லாம் பேரானந்தப் பெருவெள்ளத்தைப் பொங்கி பிரவகிக்கச் செய்தது.

திருமாலின் அவதாரங்கள் அனைத்திலும் ஆழ்வார்கள் மனம் இழந்தார்கள். ப்ராண நிலையில் ஆழ்வார் அருளும் மெய்ப்பொருள் உணர்வுகளும் ப்ரேம நிலையில் பரகால நாயகியாய் உருகும் பக்தப் ப்ரேமையும், நம் ஞானக்கண்ணை  திறப்பதுடன் பரமபக்திக்கும் வழி காட்டுகின்றன. நாலாயிர திவ்ய ப்ரபந்தமளித்த ஆழ்வார்களின் திருக்காவியம் மானுட மன இருளைப் போகும் ஞானவிளக்கு அடங்காத நீண்ட காலபிறவியாக நஞ்சை மாற்றும் அமுதமாகும்.




Sunday 13 May 2012

ஆழ்வார்கள் ஒரு சிறு குறிப்பு


மானுட காதலுக்கு மாலவன் காதலே மண்ணுலகின் முன் மாதிரி பாடம். வாழ்க்கையின் சரணாகதி தத்துவம் அன்பின் மலர்ச்சியிலிருந்து தொடங்குகிறது.

'தமிழுக்கு அமுதென்று பேர்; அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று தமிழ்      மொழியின் இனிமையும் மேன்மையும் சிலாகிக்கப்படுகிறது.  அத்தகைய உயிரணைய தமிழை செழுமைப் படுத்தியதில் பக்தி இலக்கியங்களுக்குக் கணிசமான பங்கு உண்டு.  அப்படிப்பட்ட தமிழில் பஞ்சாமிர்த தமிழமுதமாக நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தால் நம் நாவினிக்க செய்தவர்கள் ஆழ்வார்கள்.  ஆழ்வார்களின் திருக்காவியம் திருப்பாற்கடலில் கடைந்தெடுத்த தீந்தமிழ் தேவமிர்தம் போன்றதாகும்.  தமிழ் மொழிக்கு வலுவும் பொலிவும் கூட்டிய ஆழ்வார்களின் வரலாறோ காதல்    பட வைக்கும் சுவையும், நெறியும், பக்தி பரவசமும் கலந்த முக்கனி சாறாக சிறந்து விளங்குகிறது. ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை படிக்குங்கால் நாவினிக்கும், செவி இனிக்கும், சிந்தை செழிக்கும். எம்பெருமான் அருளின் பெருமழையால் ஆற்றல் மிகுந்து கவிமாரிப் பெய்தவர்கள் ஆழ்வார்கள். வாழ்க்கையின் சரணாகதி அன்பின் மலர்ச்சியிலிருந்து தொடங்குகிறது என்பதை ஆழ்வார்கள் சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

ஆழ்வார்கள் பன்னிரண்டு பேராக இப்பூவுலகில் அவதரித்தார்கள்.  அவர்கள் தென் இந்தியாவில் தோன்றினார்கள். அவர்களால் இயற்றப்பட்ட  தமிழ் பாசுரங்கள் 4000. அவை தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் எனப்படுகிறது. அவை வேதங்களுக்கு சமமாக கருதப்படுகிறது. வேதத்தை தமிழில் எளிதில் புரிந்து கொள்ள  இவை நமக்கு கொடுக்கப்பட்டது. வேதத்தில் நம்மால்  புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை  நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மூலம்  மிக எளிதில் புரிந்து கொள்ளலாம். அதனால் தான் இதற்கு  தமிழ் வேதம்  என்று பெயர்.  ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்களில் கரைக்கப்பட்டு மிகவும் சிறந்த குணங்களோடு எம்பெருமானின் திருவடியில் தங்களை ஆழப் புதைத்து கொண்டதால் அவர்களை ஆழ்வார்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் முறையே  பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார் எனப்படுகிறார்கள்.முதல் மூன்று ஆழ்வார்கள் முறையே பொய்கை ஆழ்வார், பூதத்தழ்வார், பேயாழ்வார் இவர்கள் முதலாழ்வார்கள் எனஅழைக்கப்படுவார்கள்.

பன்னிரு ஆழ்வார்கள்

 எண்
ஆழ்வார்
பிறந்த இடம்
மாதம்
நக்ஷத்திரம்





1
பொய்கை ஆழ்வார்
காஞ்சிபுரம்
ஐப்பசி
திருவோணம்
2
பூதத்தாழ்வார்
திருக்கடல்மல்லை
ஐப்பசி
அவிட்டம்
3
பேயாழ்வார்
மயிலாப்பூர்
ஐப்பசி
ஸதயம்
4
திருமழிசை ஆழ்வார்
திருமழிசை
தை
மகம்
5
நம்மாழ்வார்
ஆழ்வார் திருநகரி
வைகாசி
விசாகம்
6
மதுரக்கவி ஆழ்வார்
திருக்கோளூர்
சித்திரை
சித்திரை
7
குலசேகர ஆழ்வார்
திருவஞ்சிக்களம்
மாசி
புனர்வசு
8
பெரியாழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆனி
ஸ்வாதி
9
ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆடி
பூரம்
10
தொண்டரடிப்பொடிஆழ்வார்       
திருமண்டங்குடி
மார்கழி
கேட்டை
11
திருப்பாணாழ்வார்
திருஉறையூர்
கார்த்திகை
ரோஹிணி
12
திருமங்கை ஆழ்வார்
திருவாலிதிருநகரி
கார்த்திகை
கிருத்திகை