Saturday 26 May 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 2


தினமும் பால் காய்ச்சி சமர்ப்பித்துக் கொண்டிருந்த அந்த வயதான தம்பதியருக்கு பிள்ளையில்லா குறையை தீர்க்க திருவுள்ளம் பற்றியது அக்குழந்தை.  எப்போதும் பால் முழுவதையும் அருந்தி விடும் அக்குழந்தை அன்று அந்த பாலை மீதம் வைத்துவிட்டது. நீங்களும் அருந்துங்கள் என்று சொல்வது போல் ஜாடைக் காட்டியது. அதை அருந்தி விட்டு அவர்களும் வீடு திரும்பினர். அந்த பாலின் சக்தியினால் அவர்கள் இருவருக்கும் வியோதிகம் நீங்கி வாலிபம் திரும்பியது. இளமை உணர்வுகள் கரையுடைத்து பொங்கியது. வாழ்க்கையில் இருவரும் இன்புற்றிருந்த சமயம் மனைவி கருவுற்றாள். தெய்வக் குழந்தையின் சக்தியால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு 'கனிக்கண்ணன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். ஊரார்கள் இது கண்டு அதிசயித்து அந்த தெய்வக் குழந்தையை திருமழிசையார் என்றே வணங்கி பெருமதிப்பும் பக்தியும் கொண்டனர். அந்த தம்பதியர் கனிக்கண்ணனை திருமழிசையார் முன்னிலையில் கொண்டு வந்து விட, அவரது கடாக்ஷத்திலே நல்ல அறிவைப் பெற்று, அவருக்கு சிஷ்யன் ஆகி, பாகவத நிஷ்டனாகி, இருவரும் தோழர்களாக வளர்ந்து வந்தார்கள்.  

திருமழிசையார் ஏழு வயது வரை அவரை வளர்த்தவர்களோடு வாழ்ந்து வந்தார். பின்னர் ஐம்புலன்களையும் அடக்கி அஷ்டாங்க யோகத்தால் முழுமுதற் கடவுளை அடைய விரும்பினார். உலகின் முதற்பொருளை உணர்ந்த பின்னரே யோகத்தில் அமர வேண்டும் என்று எண்ணிய அவர் அதற்குரிய வழியை ஆராய எல்லா சமய நூல்களையும், தத்துவங்களையும் கண்டறிய எண்ணினார். சாக்கியம், சமணம் என்னும் பல நூல்களை கற்றுணர்ந்தார். தெளிவு பிறக்காமல் சைவ நூல்களையும் ஆராய்ந்தார். பல தலங்களுக்குச் சென்று வேதத்தை ஒப்புக்கொள்ளாத பிற சமயங்கள், வேதத்தை ஒப்புக்கொண்டும் அதற்கு அவப்பொருள் கூறும் குத்ருஷ்டி மதங்களான அகச்சமயங்கள் ஆகிய ஒவ்வொரு மதத்திலும் அந்தந்த மதத்திற்கு தக்க ஒழுக்கத்தோடு அவற்றில் ஊன்றி நின்று ஆராய்ந்து பார்த்து, அவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டு அவற்றிலிருந்து விலகி கடைசியில் உலகிற்கு மூலப்பொருளாக நிற்பது சிவம் ஒன்றேயாகும் என்று முடிவு கட்டி யோகங்கள் பலவும் செய்து சித்தராக மாறினார். 

தொண்டை மண்டலத்தில் உள்ள சைவ, வைணவ க்ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே வந்த திருமழிசையார் திருமயிலையில் உள்ள பேயாழ்வார் அமைத்துள்ள நந்தவனத்தை வந்தடைந்தார்.  அங்கே துளசி செடியின் அருகே நெற்றியில் திருமண் துலங்க துளசி மணி மாலைகளும், தாமிரபரணி மாலைகளும் அணிந்துக் கொண்டு யோகத்தில் ஆழ்ந்து திருத்துழாய்முடியன் ஸ்ரீமந்நாராயண தியானத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீவைஷ்ணவ சீலரான பேயாழ்வாரைக் கண்டார். அவரைக் கண்டதும் திருமழிசையார் மனதில் ஒருவித உணர்ச்சி ஏற்பட்டது. அவரது தேஜசைப் பார்த்து கொண்டிருந்த மாத்திரத்திலேயே அவரை தமது ஞான குருவாக வரித்துக் கொண்டார்.  அப்போது கண்விழித்தார் பேயாழ்வார்.  திருமழிசையார் அவரை வணங்கி, "ஸ்வாமி அடியேன் திருமழிசையார்" என்றார். திருமழிசையார் பெரிய யோகி, தத்துவ மேதை, சைவத்தில் ஆழ்ந்த பற்றுடையவர், பிற மதங்களை கைவிட்டவர் என்றெல்லாம் பலர் வாயிலாக கேள்விப்பட்டிருக்கிறார் பேயாழ்வார். அவருக்கு உண்மைகளை எடுத்துரைத்து அவரை ஸ்ரீவைஷ்ணவனாக ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபட எண்ணிய பேயாழ்வார் "அப்படியா, அடியேனை பேயன் என்றழைப்பார்கள். உம்மை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவனாகப் பிறந்தும் உலகம் அனைத்திற்குமான மூலக்காரணமும் பரம்பொருளுமான முழுமுதற்பெருமான் ஸ்ரீமந்நாராயணனைப் பற்றி உணராது போனீரே!" என்று கூறினார். அதன் பிறகு இருவருக்கும் வாதம் ஏற்பட ஆயிரக்கணக்கான வசனங்களையும் நியாயங்களையும் எடுத்து உரைத்து கடைசியில் திருமழிசையாரை வெற்றி கொண்டார் பேயாழ்வார்.  அவரின் கருத்துகளில் மனத்தை பறிக்கொடுத்த திருமழிசையார் வைஷ்ணவத்தை மிகவும் பெருமையோடும் பூறிப்போடும் மனங்குளிர ஏற்றுக்கொண்டார். 

 மனம் திருந்திய அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களோடு மந்த்ரா அர்த்தங்களையும் திருமழிசையார் செவியில் முறைப்படி  உபதேசித்தார் பேயாழ்வார். ஸ்ரீமந்நாராயண மந்த்ரம் செவிகளில் பாய்ந்ததும் திருமழிசையார் பரம விஷ்ணு பக்தரானார். அத்திருமந்த்ர மகிமையால் ஸ்ரீமந்நாராயணனை தன் அகக்கண்களால் கண்டார். சிரத்தின் மீது ஆரம் உயர்த்தி கைதொழுது அநேக தண்டனிட்டு, கண்களில் நீர் மல்க மெய்மறந்து பலவாறாக பாசுரங்களைப் பாடி பெருமானைத் துதித்தார் திருமழிசையார்.  அதைக் கண்டு பேரானாந்தம் அடைந்த பேயாழ்வார் எம்பெருமானை சிந்தையிற்கொண்டு யோக நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார். திருமழிசையாரும் அவரை வணங்கி விடைப் பெற்று திருமழிசைக்கு வந்து யோக நிலையில் நின்று திருமகள் கேள்வனை தியானித்துக் கொண்டிருந்தார். சுதர்சனத்தின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீவைஷ்ணவ பக்தரான அவர், சக்கரம் போன்று சுழன்று சுழன்று பல மதங்களில் உருண்டும் கிடந்தும் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் திருவடிக்கமலம் கிடப்பதே மெய்யான பொருள் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டார். அவருக்கு கருடாழ்வார் மீது பரந்தாமன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சேவை சாதித்தார்.

No comments:

Post a Comment