Friday 18 May 2012

முதலாழ்வார்கள் வைபவம் - பூதத்தாழ்வார்

                                                             பூதத்தாழ்வார்: 

கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும் இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடு போல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள் நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.

இந்த மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்ட நக்ஷத்திர நாளில் திருமாலின் அம்சமான கதாயுதமே குழந்தையாக பிறந்தது.

ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்த குழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர்.

அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும் அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும் கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர். முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல்  மண்ணுயிரைப் பேணிக் காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.

அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.

'நமோ நாராயணா' என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.

கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ் பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு தொண்டை மண்டலத்திலுள்ள மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சுற்றிருக்கும் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு தொடர்ந்து சென்று எம்பெருமானை தரிசித்து வந்தார். உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின் ப்ரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி அவருக்கு கனவில் உரைத்தார். திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு திருக்கோவிலூர் சென்றார் அவர். அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு, இரவு தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு ஆசிரமம் தென்படவே அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்.  

நிற்க இந்த இடத்தில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.

1 comment:

  1. சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
    தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
    சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

    தள முகவரி: http://www.saaral.in

    ReplyDelete